ஆதியாகமம் 2
2
1இவ்வாறு வானமும் பூமியும், அவற்றில் அணிவகுத்திருக்கின்ற படைப்புகள் யாவும் நிறைவு பெற்றன.
2ஏழாம் நாளானபோது, இறைவன், தாம் செய்த வேலையை நிறைவேற்றி முடித்தார்; ஏழாம் நாளில், தாம் செய்த அனைத்து வேலைகளிலிருந்தும் ஓய்ந்திருந்தார் அவர்.
3இறைவன், தாம் நிறைவேற்றிய படைப்பின் வேலைகள் எல்லாவற்றில் இருந்தும் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால், ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதாமும் ஏவாளும்
4இறைவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும்#2:4 பூமியையும் அல்லது நிலம். 6ம் வசனத்திலும் உள்ளது. படைத்தபோது, வானமும் பூமியும் உருவாகிய வரலாறு இவையே.
5இறைவனாகிய கர்த்தர் பூமியின்மேல் மழையை அதுவரை அனுப்பாததாலும், மண்ணைப் பண்படுத்த ஒருவரும் இல்லாததாலும் அதுவரை பூமியில் எந்தப் புதரும் வளர்ந்திருக்கவில்லை, எந்தச் செடியும் முளைத்திருக்கவும் இல்லை. 6ஆனாலும், பூமியிலிருந்து நீரூற்றுகள்#2:6 நீரூற்றுகள் – பனி மேலெழுந்து மண்ணின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தன. 7இறைவனாகிய கர்த்தர் மண் துகள்களிலிருந்து மனிதனை#2:7 மனிதனை – எபிரேய மொழியில் மனிதன் என்ற சொல்லும், ஆதாம் என்ற பெயர்ச் சொல்லும் ஒரே சொல்லாக அமைந்துள்ளது. உருவாக்கி, அவனுடைய மூக்கினுள் உயிர்மூச்சை ஊதினார்; அப்போது மனிதன் உயிருள்ளவனானான்.
8இந்நிலையில் இறைவனாகிய கர்த்தர், கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் தாம் விளையச் செய்த சோலையில், தாம் உருவாக்கிய மனிதனைக் குடியமர்த்தினார். 9அச்சோலையில், அழகிய தோற்றமுடைய மரங்களையும் உணவுக்கேற்ற கனி தரும் அனைத்து வகையான மரங்களையும் இறைவனாகிய கர்த்தர் மண்ணிலிருந்து வளரச் செய்தார். சோலையின் நடுவில், வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன.
10ஏதேனிலிருந்து ஒரு ஆறு ஊற்றெடுத்து, சோலைக்கு தண்ணீர் பாய்ச்சியது. அங்கிருந்து அது நான்கு ஆறுகளாகப் பிரிந்து ஓடியது. 11முதலாம் ஆற்றின் பெயர் பைசோன்; அது தங்கம் விளையும் தேசமான ஆவிலா ஊடாக நாடு முழுவதும் வளைந்து ஓடியது. 12அந்த நாட்டின் தங்கம் மிகத் தரமானது; அங்கே நறுமணமுள்ள சாம்பிராணியும்#2:12 நறுமணமுள்ள சாம்பிராணியும் அல்லது முத்துக்கள் கோமேதகக் கல்லும் இருந்தன. 13இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா#2:13 எத்தியோப்பியா – எபிரேய மொழியில் குஷ் ஊடாக நாடு முழுவதும் வளைந்து ஓடியது 14மூன்றாம் ஆற்றின் பெயர் இதெக்கேல். இது அசீரியா நாட்டின் கிழக்குப் பக்கம் ஓடியது. நான்காம் ஆற்றுக்கு யூப்ரட்டீஸ் என்று பெயர்.
15இறைவனாகிய கர்த்தர், மனிதனை அழைத்துச் சென்று ஏதேன் சோலையைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார். 16பின்பு இறைவனாகிய கர்த்தர், “நீ சோலையிலுள்ள எந்த மரத்திலிருந்தும் தாராளமாக உண்ணலாம்; 17ஆனால் நீ நன்மை தீமையின் அறிவைத் தரும் மரத்திலிருந்து மட்டும் உண்ணக் கூடாது, ஏனெனில் அதிலிருந்து உண்ணும் நாளில் நீ மரணிப்பாய், ஆம் நிச்சயமாக நீ மரணிப்பாய்”#2:17 மரணிப்பாய் – எபிரேய மொழியில் மரணிப்பாய் மரணிப்பாய் என இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
18பின்பு இறைவனாகிய கர்த்தர், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்கு இணையான, அவனுக்கு ஒத்தாசையாக இருக்கின்ற துணையை உருவாக்குவேன்” என்றார்.
19அப்போது இறைவனாகிய கர்த்தர் அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார்#2:19 உருவாக்கியிருந்தார் – எபிரேய மொழியில் உருவாக்கினார் என்றுள்ளது.. மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படியாக அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எவ்வாறு அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. 20இவ்வாறு மனிதன் அனைத்து வளர்ப்பு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் பெயர் சூட்டினான்.
ஆனால் மனிதனுக்கு இணையான, அவனுக்கு ஒத்தாசையாக இருக்கின்ற துணை இன்னமும் கிடைக்கவில்லை. 21எனவே இறைவனாகிய கர்த்தர் மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரச் செய்தார். அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். 22பின்பு இறைவனாகிய கர்த்தர், தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உருவமைத்து, அவளை மனிதனிடம் அழைத்து வந்தார்.
23அப்போது மனிதன்,
“இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும்
என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்!
இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால்,
‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்”
என்றான். 24இதனாலேயே மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் ஒன்றிணைந்து கொள்வான். அவர்கள் ஒரே உடலாவார்கள்.
25மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தாலும், அவர்களுக்கிடையே வெட்க உணர்வு இருக்கவில்லை.
Currently Selected:
ஆதியாகமம் 2: TRV
ማድመቅ
ያጋሩ
ኮፒ

ያደመቋቸው ምንባቦች በሁሉም መሣሪያዎችዎ ላይ እንዲቀመጡ ይፈልጋሉ? ይመዝገቡ ወይም ይግቡ
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.