YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 5

5
1யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. பின்பு சாலொமோன் தன் தகப்பன் தாவீது அர்ப்பணித்த பொருட்களான வெள்ளியையும், தங்கத்தையும், எல்லா பொருட்களையும் கொண்டுவந்தான். அவற்றை இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்துக்குள் கொண்டுபோய் வைத்தான்.
பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல்
2பின்பு சாலொமோன் தாவீதின் நகரமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி வரவழைத்தான். 3ஏழாம் மாதத்தின் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள்.
4இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் லேவியர்கள் பெட்டியைத் தூக்கினார்கள். 5அவர்கள் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். லேவியர்களான ஆசாரியர்கள் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். 6அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.
7அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். 8விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளையும் மூடிக்கொண்டிருந்தன. 9இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தபடியால், பெட்டியிலிருந்து வெளியே நீண்டிருந்த அவற்றின் முனைகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன. 10அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார்.
11பின்பு ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தார்கள். அங்கேயிருந்த எல்லா ஆசாரியரும் தங்கள் பிரிவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், தங்களைப் பரிசுத்தப்படுத்தியிருந்தார்கள். 12பாடகர்களான ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களும், அவர்களுடைய மகன்களும், உறவினர்களுமாக எல்லா லேவியர்களும் பலிபீடத்தின் கிழக்குப் பகுதியில் நின்றார்கள். அவர்கள் மென்பட்டு உடையை உடுத்தி, கைத்தாளங்களையும், யாழ்களையும், வீணைகளையும் இசைத்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து நூற்றிருபது ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு நின்றனர். 13எக்காளம் ஊதுபவர்களும், பாடகர்களும், ஒன்றிணைந்து ஒரே குரலில் யெகோவாவுக்கு துதியையும் நன்றியையும் செலுத்தினர். எக்காளங்கள், கைத்தாளங்கள், மற்றும் இசைக்கருவிகளுடன் தங்கள் குரல்களை உயர்த்தி, யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள்:
“யெகோவா நல்லவர்,
அவர் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.”
அப்பொழுது யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பிற்று. 14அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை இறைவனுடைய ஆலயத்தை நிரப்பியது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 நாளாகமம் 5