YouVersion Logo
Search Icon

உபாகமம் 23

23
ஒன்றுகூடுதலைத் தவிர்த்தல்
1விதைகள் நசுக்கப்பட்டதினாலோ, ஆணுறுப்பு வெட்டப்பட்டதினாலோ ஆண்மையிழந்தவன் எவனும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
2முறைகேடான உறவினால் பிறந்தவனும், அவன் சந்ததியும் பத்தாம் தலைமுறைவரை யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
3அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது. 4ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, அவர்கள் வழியிலே உங்களைச் சந்திக்க உணவுடனும், தண்ணீருடனும் வரவில்லை. அவர்கள் மெசொப்பொத்தோமியாவிலுள்ள பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமை, உங்கள்மேல் சாபம் கூறும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். 5ஆனாலும், உங்களுடைய இறைவனாகிய யெகோவா பிலேயாமுக்கும செவிசாய்க்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்மேல் அன்பு கூர்ந்ததினால், அவனுடைய சாபத்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். 6ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம்.
7ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள். 8எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம்.
முகாமில் அசுத்தம்
9நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக முகாமிட்டிருக்கும்பொழுது அசுத்தமான எல்லாவற்றிலுமிருந்து விலகியிருங்கள். 10இராக்காலத்தில் விந்து வெளிப்படுவதினால், உங்கள் மத்தியில் ஒருவன் அசுத்தப்பட்டிருந்தால், அவன் முகாமுக்கு வெளியே போய் அங்கே இருக்கவேண்டும். 11ஆனால் மாலை நேரம் வந்ததும் அவன் குளித்து சூரியன் மறையும் நேரத்தில் முகாமுக்கு மீண்டும் வரலாம்.
12முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும். 13உங்கள் ஆயுதங்களுடன் ஒன்றாக மண் தோண்டுவதற்கு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளியே போய் மலசலம் கழித்தபின் ஒரு குழியைத் தோண்டி மலத்தை மண்ணால் மூடிவிடுங்கள். 14ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் பகைவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும், உங்கள் முகாமில் உலாவுகிறார். ஆகவே அவர் உங்கள் மத்தியில் வெட்கக்கேடான எதையும் கண்டு உங்களைவிட்டு விலகிக்போகாதபடி, நீங்கள் முகாமைப் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
மற்ற சட்டங்கள்
15ஒரு அடிமை தப்பி ஓடிவந்து உன்னிடம் அடைக்கலம் புகுந்தால், அவனை அவனுடைய எஜமானிடம் பிடித்துக்கொடுக்க வேண்டாம். 16அவன் தான் தெரிந்துகொள்கிற பட்டணத்தில் தான் விரும்பிய எங்காவது உங்கள் மத்தியில் வாழட்டும். அவனை ஒடுக்கவேண்டாம்.
17இஸ்ரயேலில் ஒரு பெண்ணும் கோயில் வேசியாய் இருக்கக்கூடாது#23:17 இது கானானியர்களின் பழக்கமாயிருந்தது.. ஒரு ஆணும் அப்படியிருக்கக் கூடாது. 18வேசித்தனம் பண்ணும் ஆணோ, வேசித்தனம் பண்ணும் பெண்ணோ தங்கள் வேசித்தனத்தினால் பெறும் வருமானத்தை, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வீட்டுக்குள் எந்தவித நேர்த்திக்கடனை செலுத்தும்படிக்கும் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை அருவருக்கிறார்.
19நீங்கள் உங்கள் சகோதரனிடம் வட்டி வசூலிக்கக்கூடாது. வட்டிக்குக் கடனாகக் கொடுக்கக்கூடிய பணத்திற்கோ, உணவுப்பொருளுக்கோ, வேறு எதற்கோ வட்டி வசூலிக்கவேண்டாம். 20நீங்கள் அந்நியனிடம் வட்டிவாங்கலாம். ஆனால் உங்கள் சகோதர இஸ்ரயேலனிடம் வட்டி வசூலிக்கவேண்டாம். அப்படிச் செய்யும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் அந்நாட்டில், நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
21உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் நேர்த்திக்கடன் செய்திருந்தால், நீங்கள் அதைச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் நிச்சயமாய் அதைக் கேட்பார். தாமதித்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளியாவீர்கள். 22ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள். 23உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாயினால் சொல்லும் எதையும் செய்ய நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் சொந்த வாயினால் சுயவிருப்பத்துடன் உங்கள் நேர்த்திக்கடனை செய்தீர்கள்.
24உங்கள் அயலானுடைய திராட்சைத் தோட்டத்திற்குள்போனால், விரும்பிய அளவு திராட்சைப் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் ஒன்றையும் உங்கள் கூடையில் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். 25நீங்கள் உங்கள் அயலானுடைய வயலுக்குள்போனால் உங்கள் கையினால் கதிர்களைப் பறிக்கலாம், ஆனால் அவனுடைய தானியக் கதிர்களை அரிவாளினால் வெட்டவேண்டாம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in