YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 6

6
1அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார்.
2பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா. 3ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக#6:3 எல்லாம் வல்ல இறைவனாக என்பது எபிரெயத்தில் எல்ஷடாய் எனப்படும் நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை. 4அத்துடன், ‘இஸ்ரயேல் மக்கள் பிறநாட்டினராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். 5மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன்.
6“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். 7உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள். 8ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டிற்கு உங்களைக் கொண்டுவருவேன். அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே யெகோவா’ ” என்றார்.
9மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தான், ஆனால் அவர்களோ மனச்சோர்வினாலும் கொடூரமான அடிமைத்தனத்தினாலும் துன்பப்பட்டதனால் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை.
10அப்பொழுது யெகோவா மோசேயிடம், 11“எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் நீ போ, அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படிச் சொல்” என்றார்.
12ஆனால் மோசே யெகோவாவிடம், “இஸ்ரயேலரே எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் செவிகொடுக்கவேண்டும்? நானோ பண்படாத உதடுகளுள்ளவன்”#6:12 பண்படாத உதடுகளுள்ளவன் என்றால் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்பதாகும் வசனம் 30 என்றான்.
மோசே, ஆரோனின் குடும்ப அட்டவணை
13யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும், எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
14இஸ்ரயேலரின் குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே:
யாக்கோபின் முதற்பேறான மகனாகிய ரூபனின் மகன்கள்:
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
ரூபனின் வம்சங்கள் இவையே.
15சிமியோனின் மகன்கள்:
எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகனான சாவூல் என்பவர்கள் ஆவர்.
சிமியோனுடைய வம்சங்கள் இவையே.
16பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்:
கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர்.
லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.
17லிப்னீயும் சீமேயியும்
கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
18அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்
கோகாத்தின் மகன்கள் ஆவர்.
கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான்.
19மெராரியின் மகன்கள்
மகேலி, மூஷி என்பவர்கள்.
அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.
20அம்ராம் தன் தகப்பனின் சகோதரியான யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும், மோசேயையும் பெற்றாள்.
அம்ராம் 137 வருடங்கள் வாழ்ந்தான்.
21இத்சேயாரின் மகன்கள்
கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள் ஆவர்.
22ஊசியேலின் மகன்கள்:
மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.
23அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24கோராகியரின் மகன்கள்:
ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர்.
கோராகிய வம்சங்கள் இவையே.
25ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான்.
அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.
26இதே ஆரோனுக்கும், மோசேக்குமே, “இஸ்ரயேலருடைய கோத்திரப்பிரிவின்படி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார். 27இதே மோசேயும் ஆரோனுமே எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவது பற்றி, எகிப்திய அரசன் பார்வோனிடம் பேசினார்கள்.
ஆரோன் மோசேக்காகப் பேசுதல்
28யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, 29யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார்.
30ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யாத்திராகமம் 6