பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 1
1
1இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.
2தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!
நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்
3தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். 4அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
5உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். 6அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். 7தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். 8இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். 9ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.
10எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.
12நீங்கள் இக்காரியங்களை அறிவீர்கள். உங்களிடமுள்ள உண்மையில் நீங்கள் உறுதியுடன் உறுதிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இக்காரியங்களை நினைவூட்ட நான் எப்போதும் உதவுவேன். 13நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன். 14இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார். 15என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்துகொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன்.
கிறிஸ்துவின் மகிமையை நாங்கள் கண்டோம்
16இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருவார் என நாங்கள் உங்களிடம் சொன்னபோது புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுக்கதைகளை நாங்கள் சார்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய மாட்சிமையை நாங்களே கண்டோம். 17மிகவும் மகிமை வாய்ந்தவரிடமிருந்து விசேஷ குரலானது அவரை வந்தடைந்த போது பிதாவாகிய தேவனிடமிருந்து அவர் கௌரவமும் மகிமையையும் பெற்றார். அக்குரல், “இவர் என் அருமை குமாரன். நான் இவரைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்” என்றது. 18நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.
19தீர்க்கதரிசிகளின் செய்தியானது நம்பகமானவை என்று நாங்கள் நம்புகிறோம். தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைப் பின்பற்றுவது உங்களுக்கு நல்லது. அவர்கள் கூறியவை, பொழுது விடிந்து, உங்கள் இதயங்களில் விடிவெள்ளி எழுகிறவரைக்கும் இருளில் ஒளிவிடும் தீபத்தைப் போன்றவை. 20நீங்கள் இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எந்தத் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்திலிருந்தும் வேதவாக்கியத்தின் எந்தத் தீர்க்கதரிசனமும் வெளிப்படுவதில்லை. 21ஒரு மனிதன் சொல்ல நினைத்ததிலிருந்து எந்தத் தீர்க்கதரிசனமும் வந்ததில்லை. ஆனால் மக்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு தேவனிடமிருந்து வந்த செய்திகளைக் குறித்துப் பேசினார்கள்.
Currently Selected:
பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 1: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International