பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2
2
போலிப் போதகர்கள்
1கடந்த காலத்தில் தேவனுடைய மக்கள் மத்தியில் போலியான தீர்க்கதரிசிகளும் இருந்தனர். அதே வழியில், உங்கள் குழுவிலும் போலிப் போதகர்கள் கூட இருப்பார்கள். யாரும் பார்க்காத வகையில் இப்போலிப் போதகர்கள் மோசமான போதனைகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்களை மீட்டுக்கொண்டவரும், தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவருமான எஜமானரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். எனவே அவர்கள் விரைவில் தங்களை அழித்துக்கொள்வார்கள். 2அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். 3அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது.
4தேவ தூதர்கள் பாவம் செய்தபோது, தேவன் அவர்களைத் தண்டனையின்றி விடுதலைபெற அனுமதிக்கவில்லை. தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிற நாள்வரைக்கும் அடைந்திருக்கும் பொருட்டு நரகத்தின் இருட்டு மூலைகளில் எறிந்தார்.
5ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான்.
6சோதோம், கொமோரா என்னும் தீய நகரங்களையும் தேவன் தண்டித்தார். சாம்பலைத் தவிர வேறெதுவும் இல்லாத வகையில் தேவன் அந்த நகரங்களை நெருப்பால் முற்றிலும் அழித்தார். தேவனுக்கு எதிரான மக்களுக்கு நடக்கவிருப்பதைத் தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக தேவன் அந்நகரங்களுக்குச் செய்தார். 7ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். 8(லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது)
9ஆம், தேவன் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார். ஆகவே தமக்கு சேவை செய்கிற மக்களை எப்படி இரட்சிப்பது என கர்த்தர் அறிவார். மேலும் நியாயம்தீர்க்கிற நாள்வரை தீயவர்களைத் தண்டிப்பது எப்படி என்றும் அறிவார். 10குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும்.
போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். 11இந்தப் போலிப் போதகர்களைக் காட்டிலும் தேவதூதர்கள் வலிமையும் ஆற்றலும் மிக்கவர்கள். ஆனால் தேவதூதர்களும்கூட கர்த்தரின் முன்னிலையில் இந்தப் போலிப் போதகர்களைப் பற்றிக் குற்றம் சாட்டும்போது அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை.
12தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். 13இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள்.
அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள். 14ஒரு பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவளை அடைய விரும்புகிறார்கள். இந்தத் தீய போதகர்கள் இந்த வகையில் எப்போதும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலிமையற்ற மக்களைப் பாவ வலையில் சிக்கும்படியாகச் செய்கிறார்கள். அவர்கள் தம் இதயங்களுக்கு பேராசை கொள்ளும் பயிற்சியை அளித்திருக்கிறார்கள். அவர்கள் சாபம் பெற்றவர்கள்.
15இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் குமாரன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான். 16ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது.
17அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். 19போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான்.
20உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். 21ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும். 22“நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.
Currently Selected:
பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International