YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 14

14
இஸ்ரவேலர்கள் விட்டிற்குத் திரும்புவார்கள்
1வருங்காலத்தில், கர்த்தர் மீண்டும் யாக்கோபிடம் தமது அன்பைக் காட்டுவார். கர்த்தர் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களைத் தேர்ந்தெடுப்பார். அந்த நேரத்தில், கர்த்தர் அந்த ஜனங்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுப்பார். பிறகு யூதரல்லாத ஜனங்கள் யூத ஜனங்களோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். இரண்டு ஜனங்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக யாக்கோபின் குடும்பமாக ஆவார்கள். 2அந்த நாடுகள், இஸ்ரவேல் ஜனங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டு செல்லும். மற்ற நாடுகளில் உள்ள அந்த ஆண்களும், பெண்களும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாக ஆவார்கள். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தமது அடிமைகளாக இருக்க வற்புறுத்தினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நாடுகளைத் தோற்கடித்து, அவர்கள் மேல் ஆட்சி செய்கின்றனர். 3கர்த்தர் உங்களது கடின வேலைகளை எடுத்துப்போட்டு உங்களுக்கு ஆறுதலைத் தருவார். கடந்த காலத்தில் நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள். மனிதர்கள் உங்களைக் கடினமான வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் கடின வேலைகளை முடிவுக்குக் கொண்டுவருவார்.
பாபிலோனிய ராஜாவைப்பற்றிய பாடல்
4அந்த நேரத்தில், பாபிலோன் ராஜாவைப்பற்றிய இந்தப் பாடலை பாடத் துவங்குங்கள்:
ராஜா நம்மை ஆளும்போது, ஈனமாக ஆண்டான்.
ஆனால் இப்போது அவனது ஆட்சி முடிந்துவிட்டது.
5கர்த்தர் தீய ராஜாக்களின் கொடுங்கோலை உடைப்பார்.
கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.
6கோபத்தில் பாபிலோனிய ராஜா ஜனங்களை அடித்தான்.
ஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.
அத்தீய ராஜா ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான்.
அவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
7ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது.
இப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.
8நீ தீய ராஜாவாக இருந்தாய்.
இப்பொழுது நீ முடிந்து போனாய்.
பைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன.
லீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது.
“ராஜா எங்களை வெட்டிச் சாய்த்தான்.
ஆனால் இப்பொழுது ராஜாவே விழுந்துவிட்டான்.
அவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன.
9மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது.
ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய்.
உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும்
பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது.
ராஜாக்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து
பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது.
உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.
10இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள்.
“இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல்.
இப்பொழுது நீ சரியாக எங்களைப்போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.
11உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும்.
உங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப்பற்றிக் கூறும்.
பூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.
பூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப்பாய்.
புழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப்போல் மூடும்.
12நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய்.
ஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய்.
கடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது.
ஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய்.
13நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே,
“நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன்.
நான் வானங்களுக்கு மேலே போவேன்.
நான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன்.
நான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன்.
நான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன்.
14நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன்.
நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய்.
15ஆனால் அது நடைபெறவில்லை.
நீ தேவனோடு வானத்துக்குப்போகவில்லை.
நீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.
16ஜனங்கள் உன்னைக் கவனிக்கிறார்கள்.
உன்னைப்பற்றி சிந்திக்கிறார்கள்.
நீ ஒரு மரித்துப்போன உடல் என்று ஜனங்கள் பார்க்கின்றனர் ஜனங்கள் சொல்லுகிறார்கள்,
“பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அதே மனிதன் இவன்தானா?
17இதே மனிதன்தான் நகரங்களை அழித்து,
நாடுகளை வனாந்திரமாகச் செய்தவனா?
இதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து
அவர்களைத் தங்கள் வீடுகளுக்குப்போகவிடாமல் செய்தவனா?”
18பூமியில் ஒவ்வொரு ராஜாவும் மகிமையோடு மரித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு ராஜாவும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.
19ஆனால் தீய ராஜாவாகிய நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய்.
நீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப்போல் வெட்டித் தூர எறியப்பட்டாய்.
நீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப்போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர்.
இப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப்போலிருக்கிறாய்.
கல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.
20மற்ற ராஜாக்கள் பலர் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர்.
ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய்.
ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய்.
நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய்.
நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.
21அவனது பிள்ளைகளைக் கொலை செய்யத் தயாராகுங்கள்.
அவர்களின் தந்தை குற்றவாளி.
அதனால் அவர்களைக் கொல்லுங்கள்.
அவனது பிள்ளைகள் மீண்டும் நாட்டின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் மீண்டும் தமது நகரங்களால் உலகத்தை நிரப்பமாட்டார்கள்.
22சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், “அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்” என்றார். இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.
23கர்த்தர்: “நான் பாபிலோனை மாற்றுவேன். அந்த இடம் ஜனங்களுக்காக இல்லாமல் மிருகங்களுக்குரியதாகும். அந்த இடம் தண்ணீருள்ள பள்ளத்தாக்கு ஆகும். நான் அழிவு என்னும் துடைப்பத்தை எடுத்து பாபிலோனைத் துடைத்துப்போடுவேன்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
தேவன் அசீரியாவையும் தண்டிப்பார்
24சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். “நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும். 25எனது நாட்டிலுள்ள அசீரிய ராஜாவை நான் அழிப்பேன். என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன். அந்த ராஜா எனது ஜனங்களை அவனது அடிமைகளாக்கினான். அவர்களின் பின் கழுத்தின்மேல் நுகத்தடியைப் பூட்டியிருக்கிறான். யூதா ஜனங்களின் கழுத்திலிருந்து அந்தத் தடி நீக்கப்படும். அந்தப் பாரம் விலக்கப்படும். 26எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்” என்று கர்த்தர் சொன்னார்.
27கர்த்தர் தனது திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதனை எவரும் தடுக்க இயலாது. கர்த்தர் தனது கைகளை உயர்த்தி ஜனங்களைத் தண்டிக்கும்போது எவரும் அவரைத் தடுக்கமுடியாது.
பெலிஸ்தியாவுக்கான தேவனுடைய செய்தி
28இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் ராஜா மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.
29பெல்ஸ்தியா நாடே உன்னை அடித்த ராஜா மரித்துப்போனதால் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஆனால் நீ உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். அவனது ஆட்சி முடிந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் ராஜாவின் குமாரன் வந்து ஆட்சி செய்வான். இது, ஒரு பாம்பு அதை விட ஆபத்தான பாம்மைப் பெற்றது போன்றிருக்கும். இந்த புதிய ராஜா விரைவும் ஆபத்தும் கொண்டு பாம்புபோல உங்களுக்கு இருப்பான்.
30ஆனால் எனது ஏழை ஜனங்கள் பாதுகாப்புடன் உணவு உண்பார்கள். அவர்களின் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள். எனது ஏழை ஜனங்கள் படுத்திருந்து பாதுகாப்பை உணர்வார்கள். ஆனால் உனது குடும்பத்தை நான் பட்டினியோடு கொல்வேன். மீதியுள்ள உனது ஜனங்கள் மடிந்துப்போவார்கள்.
31நகர வாசலருகில் உள்ள ஜனங்களே, கதறுங்கள்!
நகரத்திலுள்ள ஜனங்களே, கதறுங்கள்!
பெலிஸ்தியாவிலுள்ள அனைத்து ஜனங்களும் நடுங்குவார்கள்.
உங்கள் தைரியம் சூடான மெழுகுபோல் உருகிவிடும்.
வடக்கே பாருங்கள்!
அங்கே புழுதி மேகம் இருக்கிறது!
அசீரியாவிலிருந்து படையொன்று வந்துகொண்டிருக்கிறது!
அந்தப் படையிலுள்ள அனைவரும் பலம் கொண்டவர்கள்!
32அந்தப் படை தம் நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பும்.
அந்தத் தூதுவர்கள் தம் ஜனங்களிடம், “பெலிஸ்தியா தோற்கடிக்கப்பட்டது.
ஆனால் கர்த்தர் சீயோனைப் பலப்படுத்தினார்.
அவரது ஏழை ஜனங்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று அறிவிப்பார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 14