YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 104

104
1என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்!
நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
2ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர்.
நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
3தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர்.
அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக்
காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
4தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.#104:4 தேவனே … உண்டாக்கினீர் அல்லது “உமது தூதர்களை ஆவியாக உருவாக்கினீர்” எனப்படும்.
உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
5தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர்.
எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
6நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர்.
தண்ணீர் மலைகளை மூடிற்று.
7நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று.
தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
8தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று,
பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
9நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர்.
தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.
10தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர்.
பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
11நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன.
காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
12வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும்.
அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
13மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
14மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார்.
நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம்.
அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
15நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும்
நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும்,
நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.
16லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை.
கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
17அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும்.
பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
18காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும்.
குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
19தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர்.
எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
20எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து
சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
21தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல
தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
22அப்போது சூரியன் எழும்பும்,
மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
23அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள்,
அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
24கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.
27தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.
31கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.
33என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
35பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
கர்த்தரை துதியுங்கள்!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீத புத்தகம் 104