YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 115

115
1கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
மகிமை உமக்கே உரியது.
உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
2எங்கள் தேவன் எங்கே என்று
ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
3தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
4அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
5அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
6அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
7அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
8அச்சிலைகளைச் செய்து,
அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
9இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17மரித்தவர்களும்,
கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18நாம் கர்த்தரை துதிப்போம்.
இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.
அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீத புத்தகம் 115