YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 88

88
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
1தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
2தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
3இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
நான் விரைவில் மரிப்பேன்.
4ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
5மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
6பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
7தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
9என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீத புத்தகம் 88