ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2
2
யூதர்களும் பாவிகளே
1மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். 2இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். 3அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? 4தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.
5நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். 6ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். 7சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். 8மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். 9முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.
12தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். 13ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.
14யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். 15அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.
16தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.
யூதர்களும் நியாயப்பிரமாணமும்
17நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24“யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்”#ஏசா. 52:5 என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
25நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
28சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.
Currently Selected:
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International