லூக்கா 11
11
மன்றாடுதல் குறித்து இயேசுவின் போதனை
1ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடர்களுக்கு மன்றாடக் கற்றுக் கொடுத்தது போல, நீரும் எங்களுக்கு மன்றாடக் கற்றுத் தாரும்” என்றான்.
2அப்போது அவர், “நீங்கள் மன்றாடும்போது சொல்ல வேண்டியது:
“ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே,
உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது அரசு வருவதாக.
உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.
3எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்.
4எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
ஏனெனில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கின்றோமே.
எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும்’ ”
என்பதே.
5அதன்பின்பு அவர் அவர்களிடம், “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருந்தால் அவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு. 6ஏனெனில், பயணம் போய்க் கொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால், 7அப்போது உள்ளே இருக்கின்றவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டு விட்டது. என் பிள்ளைகளும் என்னுடன் படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ? 8நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் காரணமாக எழுந்து, அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும்கூட, விடாப்பிடியாக கேட்ட அவனது துணிச்சலின் காரணமாக எழுந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.
9“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். 10ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது.
11“உங்களில் எந்த தகப்பனாவது, மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? 12அல்லது ஒரு முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!” என்றார்.
இயேசுவும் பேய்களின் தலைவனும்
14ஒரு நாள் இயேசு, வாய் பேச இயலாத ஒரு பேயை ஒருவனிடமிருந்து துரத்தினார். அவனிலிருந்த பேய் வெளியேறியபோது, பேச முடியாமல் இருந்த அவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக் கண்டு வியப்படைந்தார்கள். 15ஆனாலும் அவர்களில் சிலர், “பேய்களின் தலைவனான பெயெல்செபூலைக் கொண்டே இவன் பேய்களைத் துரத்துகிறான்” என்றார்கள். 16வேறு சிலர் அவரைச் சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள்.
17இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கின்ற எந்த அரசும் பாழாய்ப் போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கின்ற எந்தக் குடும்பமும் விழுந்து போகும். 18சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், அவனுடைய அரசு எப்படி நிலைத்து நிற்கும்? நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்கின்றீர்களே, 19நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்றால், உங்களைப் பின்பற்றுகின்றவர்கள் யாரைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறார்கள்? ஆகவே அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும். 20ஆனால், நான் பேய்களை இறைவனுடைய விரலினால்#11:20 இறைவனுடைய விரலினால் – இறைவனுடைய வல்லமையினால் என்பது இதன் அர்த்தம். துரத்துகிறபடியால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்திருக்கிறது என்பது தெளிவாகின்றது.
21“வலிமை மிக்க ஒருவன், ஆயுதம் தாங்கியவனாய் தன் மாளிகையைக் காவல் செய்யும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். 22ஆனால், இவனைப் பார்க்கிலும் வலிமையுள்ள வேறொருவன், இவன்மீது தாக்குதலை மேற்கொள்ளும்போதோ, இவன் நம்பியிருந்த ஆயுதங்களைப் பறித்துச் செல்வதோடு, இவனிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் பிறருக்கு பங்கிட்டுக் கொடுப்பான்.
23“என்னோடு கூடவே இராதவன், எனக்கு விரோதமாய் இருக்கின்றான். என்னுடன் இணைந்து மக்களை ஒன்றுசேர்க்காதவன், அவர்களைச் சிதறடிக்கிறான்.
24“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வரண்ட இடங்களுக்கூடாகப் போய், இளைப்பாற இடம் தேடுகிறது; ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாததால், ‘நான் விட்டுப் புறப்பட்டு வந்த வீட்டிற்கே திரும்பிப் போவேன்’ என்று சொல்கின்றது. 25அது அந்த வீட்டிற்கு வரும்போது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதைக் காண்கின்றது. 26எனவே அது போய், தன்னைப் பார்க்கிலும் கொடிதான வேறு ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, வீட்டிற்குள் புகுந்து அவையெல்லாம் அங்கேயே வசிக்கும். அதனால் அந்த மனிதனுடைய பிந்திய நிலைமை, அவனது முந்திய நிலைமையைவிட மோசமானதாக மாறும்” என்றார்.
27இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் தனது குரலை உயர்த்தி அவரிடம், “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகின்றவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
யோனாவின் அடையாளம்
29மக்கள் இன்னும் அதிகமாய் ஒன்றுகூடி வந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. 30நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்தது போல, இந்தத் தலைமுறையினருக்கு மனுமகன் அடையாளமாய் இருப்பார். 31நியாயத்தீர்ப்பின்போது தென்னாட்டு அரசியும்கூட,#11:31 தென்னாட்டு அரசியும்கூட – பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் தேசத்தின் தென் பகுதியிலிருந்த ஒரு தேசத்தின் அரசி. 1 இராஜா. 10:1-13 இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவாள்; ஏனெனில், அவள் பூமியின் மிகத் தொலைவிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாள். ஆனால் இப்பொழுதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார். 32நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்” என்றார்.
உடலின் விளக்கு
33“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைவான ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகின்றவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். 34உங்களுடைய கண் உங்கள் உடலின் விளக்காய் இருக்கின்றது. உங்களுடைய கண்கள் நல்லதாய் இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாய் இருக்கும். ஆனால் அவை கெட்டுப்போய் இருந்தால், உங்கள் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும். 35ஆகவே, உங்களுக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருளடையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 36உங்கள் உடலின் எந்தப் பகுதியேனும் இருளடையாமல் முழுவதும் பிரகாசமாக இருந்தால், ஒரு விளக்கின் வெளிச்சமானது உங்களுக்குப் பிரகாசத்தைத் தருவது போல், உங்களுடைய முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.
மதத் தலைவர்கள் கண்டிக்கப்படுதல்
37இயேசு பேசிக் கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உண்பதற்கு வரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று உணவுப் பந்தியில் உட்கார்ந்தார். 38உண்பதற்கு முன்னதாக, இயேசு தம்முடைய கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியப்பட்டான்.
39அப்போது ஆண்டவர் அவனிடம், “பரிசேயரே, நீங்களோ கிண்ணங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கின்றீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசையினாலும், கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது. 40மூடர்களான மக்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? 41வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு மாறாக, உள்ளே இருப்பதை ஏழைகளுக்கு கொடுங்கள். அப்போது அனைத்துமே உங்களுக்கு சுத்தமாக இருக்கும்.
42“பரிசேயரே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறி வகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் நியாயத்தையும், இறை அன்பையும், அலட்சியம் செய்கின்றீர்கள். இவைகளையே நீங்கள் செய்திருக்க வேண்டும். அதேவேளை, முன்பு செய்தவற்றையும் கைவிடக் கூடாது.
43“பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களையும் பெற விரும்புகிறீர்கள்.
44“உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில், நீங்கள் அடையாளச் சின்னம் இல்லாத கல்லறைகளைப் போல் இருக்கின்றீர்கள். ஆகவே, அது என்னவென்பதை அறியாமல், மனிதர்கள் அதன்மீது நடந்து போகின்றார்கள்” என்றார்.
45நீதிச்சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்கின்றபோது, எங்களையும் நிந்திக்கிறீர்” என்றான்.
46அதற்கு இயேசு, “நீதிச்சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் மக்களால் சுமக்க முடியாத சுமைகளை#11:46 சுமைகளை என்பது சமய சட்ட திட்டங்கள் நீங்கள் அவர்கள்மீது சுமத்துகிறீர்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கென, நீங்களோ உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.
47“உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில், உங்கள் முற்பிதாக்கள் கொலை செய்த இறைவாக்கினர்களுக்கு நீங்கள் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 48எனவே உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கின்றீர்கள்; அவர்கள் இறைவாக்கினர்களைக் கொன்றார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 49இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலர்களையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலை செய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் கடுமையாய் துன்புறுத்துவார்கள்’ என்று சொல்லி இருக்கின்றார். 50ஆகையால் உலகம் தொடங்கியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவருடைய இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும். 51அவ்விதமே ஆபேலுடைய இரத்தம் முதற்கொண்டு, ஆலய பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.
52“நீதிச்சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! அறிவிற்குரிய சாவியை நீங்கள் எடுத்துப் போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.
53இயேசு அங்கிருந்து புறப்படும்போது, பரிசேயர்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அவரைக் கடுமையாக எதிர்த்து, அவரிடம் கேள்விகளைக் கேட்டு, 54அவருடைய வார்த்தைகளிலிருந்தே அவரைக் குற்றம் பிடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Currently Selected:
லூக்கா 11: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.