மத்தேயு 26
26
இயேசுவுக்கு எதிரான சதித் திட்டம்
1இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: 2“நீங்கள் அறிந்திருக்கின்றபடி, பஸ்கா பண்டிகைக்கு#26:2 பஸ்கா பண்டிகைக்கு – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவார்” என்றார்.
3அவ்வேளையில் தலைமை மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதம மதகுருவின் அரண்மனையில் ஒன்றுகூடி, 4இயேசுவை இரகசியமாகக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டினார்கள். 5ஆனாலும், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
சீமோன் வீட்டில் இயேசு
6பெத்தானியாவிலே, முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு இருந்தபோது, 7ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த வாசனைத் தைலம் உள்ள, வெள்ளைக் கல் குடுவையுடன் அவரிடம் வந்தாள். அவர் உணவுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
8சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்விரயம்? 9இந்த வாசனைத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.
10இயேசு இதை அறிந்து அவர்களிடம், “இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்த நற்காரியத்தை எனக்குச் செய்திருக்கின்றாள். 11ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்,#26:11 உபா. 15:11 ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டேன். 12இவள் இந்த வாசனைத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, அடக்கம் செய்வதற்கு என்னைத் தயார் செய்திருக்கின்றாள். 13நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளை ஞாபகப்படுத்த சொல்லப்படும்” என்றார்.
இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் உடன்படுதல்
14பின்னர், யூதாஸ் ஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு பேரில் ஒருவன், தலைமை மதகுருக்களிடம் போய், 15“நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16அவ்வேளையிலிருந்து யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.
சீடர்களுடன் பஸ்கா விருந்து
17புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவை உண்ணும்படி, உமக்காக நாங்கள் எங்கே ஆயத்தம் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்” எனக் கேட்டார்கள்.
18அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கின்றதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவை அனுசரிக்கப் போகின்றேன் என்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றார். 19இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை அனுசரிக்க ஆயத்தம் செய்தார்கள்.
20மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும்கூட பந்தியில் இருந்தார். 21அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.
22அப்போது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “ஆண்டவரே, அது நானா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.
23அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னுடன்கூட கை போட்டவனே, என்னைக் காட்டிக் கொடுப்பான். 24தம்மைக் குறித்து வேதவசனத்தில் எழுதியிருக்கின்றபடியே மனுமகன் போகப் போகின்றார்.#26:24 போகப் போகின்றார் – இதன் அர்த்தம் மரணிக்கப் போகின்றார் என்பதாகும். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்ற மனிதனுக்கோ ஐயோ பேரழிவு! அவன் பிறக்காமலே இருந்திருந்தால், அது அவனுக்கு நலமாயிருக்குமே” என்றார்.
25அப்போது அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “அதை நீயே சொல்லிவிட்டாய்” என்று பதிலளித்தார்.
26அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.
27பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். 28இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். 29“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரை, இந்த திராட்சைப் பழரசத்தை குடிக்க மாட்டேன்” என்றார்.
30ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, அவர்கள் ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
பேதுரு மறுதலிக்கப் போவதை இயேசு முன்னறிவித்தல்
31அப்போது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப் போவீர்கள். ஏனெனில்,
“ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன்.
அப்போது மந்தையின் செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’#26:31 சக. 13:7
என்று எழுதியிருக்கிறது.
32“ஆயினும் நான் உயிரோடு எழுந்த பின், உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
33அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போக மாட்டேன்” என்றான்.
34இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார்.
35ஆனால் பேதுருவோ, “நான் உம்முடனேகூட உயிர் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், நான் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.
கெத்செமனேயில் இயேசு
36பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்கு போய் மன்றாடும் வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். 37அவர் பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், மிகவும் துயரமுற்றுக் கலக்கமடையத் தொடங்கினார். 38அவர் அவர்களிடம், “என் ஆத்துமா மரணமடையும் அளவுக்கு துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார்.
39அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீக்கப்படுவதாக. ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று மன்றாடினார்.
40பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். 41“விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது நீங்கள் சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
42அவர் இரண்டாவது தடவையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்காதெனில் உம்முடைய நோக்கமே நிறைவேறட்டும்” என்று மன்றாடினார்.
43அவர் திரும்பி வந்தபோது, அவர்கள் மீண்டும் நித்திரை செய்வதைக் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. 44எனவே மீண்டும், அவர் அவர்களைவிட்டு விலகிப் போய், திரும்பவும் மூன்றாவது தடவையாக, அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார்.
45பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ பாருங்கள், வேளை நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். 46எழுந்திருங்கள், நாம் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் வருகின்றான்!” என்றார்.
இயேசு கைது செய்யப்படுதல்
47இயேசு இன்னும் பேசிக் கொண்டிருக்கையில், பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன், தலைமை மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்த பெருங் கூட்டம், வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. 48அவரைக் காட்டிக் கொடுப்பவன், “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே அந்த மனிதர்; அவரைக் கைது செய்யுங்கள்” என்று ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தான். 49ஆகவே, யூதாஸ் இயேசுவை நோக்கி அவரருகில் வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
50இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்” என்றார்.
அப்போது அவனுடன் வந்தவர்கள் முன்னே வந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். 51அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி, தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான்.
52இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கின்ற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். 53என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான பெரும் படைகொண்ட#26:53 படைகொண்ட – கிரேக்க மொழியில் லேகியோன். ஒரு லேகியோன் என்பது சுமார் 6,000 வீரர்களைக் கொண்ட படைப் பிரிவு. இறைதூதர்களை அனுப்புவார் அல்லவா? 54ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிறைவேற வேண்டும் என்று சொல்கின்ற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார்.
55அவ்வேளையில் இயேசு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு, நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா? நான் தினமும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. 56ஆயினும் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவை எல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்போது சீடர்கள் எல்லோரும், அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப் போனார்கள்.
நியாயசபையின் முன் இயேசு
57இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைத் தலைமை மதகுரு காய்பாவிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். 58பேதுருவோ, சற்று தொலைவிலே அவரைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவின் முற்றம் வரைக்கும் சென்றான். அவன் உள்ளே போய் நடக்கப் போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான்.
59தலைமை மதகுருக்களும் நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிராக பொய்யான சாட்சியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; 60பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை.
கடைசியாக இரண்டு பேர் முன்வந்து, 61“ ‘இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப் போடவும், அதை மூன்று நாளில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும்’ என்று சொன்னான்” என்றார்கள்.
62அப்போது தலைமை மதகுரு எழுந்து நின்று இயேசுவிடம், “நீ இதற்குப் பதில் சொல்ல மாட்டாயா? இவர்கள் உனக்கு எதிராக சாட்சி சொல்கின்றார்களே, என்ன இது?” என்று கேட்டான். 63ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார்.
தலைமை மதகுரு அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கின்றேன். நீ இறைவனின் மகனான மேசியா என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான்.
64இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கின்றபடிதான். ஆனாலும் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்: இதுமுதல் மனுமகன், வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”#26:64 சங். 110:1; தானி. 7:13. என்றார்.
65அப்போது தலைமை மதகுரு, தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகின்றான்! இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
66அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள்.
67பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரை குட்டினார்கள். மற்றவர்கள் அவரது முகத்தில் அறைந்து, 68“மேசியாவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
69பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்போது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள்.
70அதற்கு அவன், “நீ என்ன சொல்கின்றாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அதை மறுதலித்தான்.
71பின்பு அவன் வெளியே முற்றத்து வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரப் பெண் அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள்.
72அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான்.
73சிறிது நேரத்திற்குப் பின் அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக் கொடுக்கின்றது” என்றார்கள்.
74அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி, சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
உடனே சேவல் கூவியது. 75“சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான்.
Currently Selected:
மத்தேயு 26: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.