Logo YouVersion
Eicon Chwilio

ஆதியாகமம் 2

2
ஏழாவது நாள்-ஓய்வு
1பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. 2தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். 3தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று.
மனித குலத்தின் தொடக்கம்
4இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். 5பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.
6பூமியிலிருந்து தண்ணீர்#2:6 தண்ணீர் அல்லது மூடுபனி. எழும்பி நிலத்தை நனைத்தது. 7பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். 8பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். 9தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.
10ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று. 12அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன. 13இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து.
15தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். 16தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். 17ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.
முதல் பெண்
18மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.
19தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான். 20மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. 21எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். 22தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். 23அப்பொழுது அவன்,
“இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி;
அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை.
அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது.
அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள்.
அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.
24அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.
25மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

Uwcholeuo

Rhanna

Copi

None

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda