YouVersion logo
Ikona pretraživanja

ஆதியாகமம் 23

23
சாராளின் மரணம்
1சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள். 2அவள் கானானில் எப்ரோன் என்று அழைக்கப்பட்ட, கீரியாத் அர்பா என்னும் ஊரில் இறந்தாள்; அங்கே ஆபிரகாம் சாராளுக்காகத் துக்கித்து, அழுது புலம்பினான்.
3அதன்பின்பு ஆபிரகாம், இறந்த தன் மனைவியின் அருகிலிருந்து எழுந்து, ஏத்தியருடன் பேசினான். அவன் அவர்களிடம், 4“நான் இங்கு உங்கள் மத்தியில் அந்நியனும், வெளிநாட்டவனுமாய் இருக்கிறேன். இறந்த என் மனைவியைப் புதைப்பதற்கான ஒரு நிலத்தை விலைக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.
5அதற்கு ஏத்திய மக்கள் ஆபிரகாமிடம், 6“ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும். நீர் எங்கள் மத்தியில் வல்லமையுள்ள பிரபுவாய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் நீர் விரும்பும் சிறந்த கல்லறை ஒன்றில் உமது மனைவியை அடக்கம்பண்ணும். நீர் அடக்கம்பண்ணுவதற்கு எங்களில் ஒருவனும் தன் கல்லறையைத் தர மறுக்கமாட்டான்” என்றார்கள்.
7அப்பொழுது ஆபிரகாம் எழுந்து, அந்த நாட்டு மக்களான ஏத்தியருக்கு முன்பாகத் தலைவணங்கினான். 8அவன் அவர்களிடம், “இறந்த என் மனைவியை இங்கு அடக்கம்பண்ணுவதற்கு அனுமதிக்க உங்களுக்குச் சம்மதமானால், நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். சோகாரின் மகன் எப்ரோனிடம் எனக்காகப் பரிந்துபேசுங்கள். 9அவனுடைய நிலத்தின் எல்லையில், அவனுக்குச் சொந்தமாக இருக்கும் மக்பேலா என்னும் குகையை எனக்கு விற்கும்படி சொல்லுங்கள். அது உங்கள் மத்தியில் என் குடும்பத்தின் புதைக்கும் இடமாக இருக்க, அதை முழு விலைக்கு எனக்கு விற்கும்படி கேளுங்கள்” என்றான்.
10அப்பொழுது ஏத்தியனான எப்ரோன் தன் மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அவன் தன் பட்டண வாசலுக்கு வந்திருந்த ஏத்தியர் அனைவரும் கேட்கத்தக்கதாக ஆபிரகாமுக்குப் பதிலளித்து, 11“இல்லை ஐயா, நான் சொல்வதைக் கேளும்; நீர் கேட்கும் நிலத்தையும், அதிலுள்ள குகையையும் என் மக்கள் முன்னிலையில் உமக்குச் சொந்தமாகத் தருகிறேன். உமது இறந்த மனைவியை அதிலே அடக்கம்பண்ணும்” என்றான்.
12ஆபிரகாம் அந்நாட்டு மக்களுக்கு மறுபடியும் வணக்கம் செலுத்தி, 13அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனிடம், “விரும்பினால் நான் சொல்வதைக் கேளும், நிலத்தின் மதிப்பை நான் உமக்குக் தருகிறேன். இறந்த என் மனைவியை நான் அங்கு அடக்கம்பண்ணும்படி பணத்தை என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
14அதற்கு எப்ரோன் ஆபிரகாமிடம், 15“ஐயா, நான் சொல்வதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் வெள்ளி#23:15 அதாவது, சுமார் 10 பவுண்டுகள் அல்லது 4.6 கிலோகிராம் அளவுக்கு வெள்ளி மதிப்பாகும். ஆனால் எனக்கும் உமக்கும் இடையில் அது எம்மாத்திரம்? நீர் உமது இறந்த மனைவியை இந்த நிலத்தில் அடக்கம் செய்யும்” என்றான்.
16ஏத்தியருக்குக் கேட்கத்தக்கதாக எப்ரோன் சொன்ன விலைக்கு ஆபிரகாம் சம்மதித்தான். அவன் வியாபாரிகளின் நடைமுறையில் இருந்த எடையின்படி, நானூறு சேக்கல் வெள்ளியை நிறுத்து அவனுக்குக் கொடுத்தான்.
17இவ்வாறு மம்ரேக்கு அருகே மக்பேலாவிலுள்ள எப்ரோனின் வயல், அதாவது வயலும் அதிலுள்ள குகையும், அதன் எல்லைகளுக்குட்பட்ட மரங்களும் விற்கப்பட்டன. 18அது ஆபிரகாமின் சொத்தாக, பட்டணத்தின் வாசலுக்குள் வந்த எல்லா ஏத்தியருக்கு முன்பாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. 19அதற்குப்பின் ஆபிரகாம் கானான் நாட்டில், எப்ரோனிலுள்ள மம்ரேக்கு அருகே, மக்பேலா வயலில் உள்ள குகையில் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தான். 20இவ்வாறு அந்த வயலும், அதிலுள்ள குகையும் ஆபிரகாமுக்குச் சொந்தமான அடக்க நிலமாக ஏத்தியரால் உறுதிப்படுத்தப்பட்டது.

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj