YouVersion logo
Ikona pretraživanja

ஆதியாகமம் 8

8
1இறைவன் நோவாவையும், பேழைக்குள் அவனுடன் இருந்த காட்டு மிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் நினைவுகூர்ந்தார்; அவர் பூமிக்கு மேலாக ஒரு காற்றை அனுப்பினார், அப்பொழுது வெள்ளம் வற்றத் தொடங்கியது. 2நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று. 3படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது. 4ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது. 5பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன.
6அதிலிருந்து நாற்பது நாட்கள் சென்றபின், நோவா பேழையில் தான் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, 7ஒரு காகத்தை வெளியே அனுப்பினான், அது தரையில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது. 8பின்பு அவன் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டதோ என்று பார்க்கும்படி ஒரு புறாவை அனுப்பினான். 9பூமியின் மேற்பரப்பெங்கும் வெள்ளமாய் இருந்தபடியால், அதற்கு காலூன்றி நிற்க இடம் இருக்கவில்லை; எனவே அது பேழைக்குத் திரும்பி நோவாவிடம் வந்தது. அவன் தன் கையை நீட்டிப் புறாவைப் பிடித்து, பேழைக்குள் தன்னிடம் எடுத்துக்கொண்டான். 10அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான். 11அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான். 12அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை மறுபடியும் வெளியே அனுப்பினான், ஆனால் இம்முறை அது அவனிடம் திரும்பி வரவில்லை.
13நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது. 14இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று.
15அப்பொழுது இறைவன் நோவாவிடம், 16“நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா. 17உன்னுடன் இருக்கும் எல்லா விதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை பூமியில் பலுகி, எண்ணிக்கையில் பெருகட்டும்” என்றார்.
18அப்படியே நோவா தன்னுடைய மகன்களோடும், தன் மனைவியோடும், மகன்களின் மனைவிகளோடும் வெளியே வந்தான். 19எல்லா மிருகங்களும், தரையில் ஊரும் எல்லா உயிரினங்களும், எல்லா பறவைகளும் பூமியில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன.
20அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் அவன் சுத்தமான மிருகங்கள், சுத்தமான பறவைகள் எல்லாவற்றிலுமிருந்து சிலவற்றைத் தகன காணிக்கைகளாகப் பலியிட்டான். 21மகிழ்ச்சியூட்டும் அந்த நறுமணத்தை யெகோவா முகர்ந்து, தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டதாவது: “மனிதனின் இருதயமோ பிள்ளைப் பருவத்திலிருந்தே, தீமையில்தான் நாட்டம் கொண்டிருக்கிறது; ஆனாலும், மனிதனின் நிமித்தம் நான் இனி ஒருபோதும் நிலத்தைச் சபிக்கமாட்டேன்.” இப்பொழுது செய்ததுபோல், இனி ஒருபோதும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்கமாட்டேன்.
22“விதைப்பும் அறுப்பும்,
குளிரும் வெப்பமும்,
கோடைகாலமும் குளிர்காலமும்,
இரவும் பகலும்
பூமி நிலைத்திருக்கும்வரை
இனி ஒருபோதும் ஒழியாது.”

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj