YouVersion logo
Ikona pretraživanja

லூக்கா 24

24
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள். 2அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல், 4அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள். 5அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்? 6அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: 7‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள். 8அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
9அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள். 10மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள். 11அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது. 12ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
எம்மாவூ கிராமத்தின் வழியில் இயேசு
13இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம்#24:13 ஏறக்குறைய ஏழு மைல் இருந்தது. 14அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள். 15அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்; 16ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
17இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள். 18அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
19அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக:
“நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார். 20தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்; 21நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. 22அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். 23அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். 24அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! 26கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?” 27என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார். 29அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
30இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். 31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார். 32அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
33அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள். 34அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள். 35அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்
36சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
37அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள். 38இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது? 39என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
40இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார். 42அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை#24:42 சில மொழிபெயர்ப்பில் தேன் அல்லது தேன் கூட்டுத் துண்டு என்று உள்ளது. அவருக்குக் கொடுத்தார்கள். 43அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
44“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார். 46இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். 47மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும். 48இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள். 49என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குச் செல்லுதல்
50இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். 51இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். 52அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். 53அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

Trenutno odabrano:

லூக்கா 24: TCV

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj