மத்தேயு 4
4
இயேசு சோதிக்கப்படுதல்
1அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். 2அவர் இரவுபகலாக நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியுடன் இருந்தார். 3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடம் வந்து, “நீர் இறைவனின் மகனெனில், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி கட்டளையிடுவீராக!” என்றான்.
4ஆனால் இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமன்றி, இறைவனுடைய வாயிலிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கின்றது”#4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார்.
5பின்பு பிசாசு அவரை பரிசுத்த நகரத்திற்கு#4:5 பரிசுத்த நகரத்திற்கு – எருசலேம் அழைத்துச் சென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, 6“நீர் இறைவனின் மகனெனில், மேலிருந்து கீழே குதித்திடுவீராக!
“ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது பாதம் கல்லின்மீது மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’
என்று எழுதப்பட்டிருக்கின்றதே”#4:6 சங். 91:11,12 என்றான்.
7இயேசு அவனுக்குப் பதிலளித்து, “ ‘உங்கள் இறைவனாகிய கர்த்தரை சோதித்துப் பார்க்க வேண்டாம்’ என்றும் எழுதப்பட்டிருக்கின்றதே”#4:7 உபா. 6:16 என்றார்.
8மீண்டும் பிசாசு அவரை மிக உயரமான ஒரு மலையின்மீது அழைத்துச் சென்று, உலகத்தின் அனைத்து இராச்சியங்களையும், அதன் மேன்மையையும் அவருக்குக் காண்பித்து, 9“நீர் எனக்கு முன்னால் தரைவரை தலைதாழ்த்தி விழுந்து என்னை ஆராதித்தால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.
10இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறதே”#4:10 உபா. 6:13 என்று சொன்னார்.
11அப்போது பிசாசு அவரைவிட்டுச் விலகிச் சென்றான்; இதோ! இறைதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தல்
12யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றதையடுத்து, அவர் யூதேயாவை#4:12 யூதேயாவை – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. விட்டுவிலகி கலிலேயாவுக்கு வந்தார். 13அவர் நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடலருகே இருந்தது. 14இறைவாக்கினன் ஏசாயா மூலமாய் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது:
15“செபுலோன் நாடே! நப்தலி நாடே!
யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே!
யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவே!
16இருளில் வாழும் மக்கள்
பெரிய ஒளியைக் கண்டார்கள்;
மரண நிழல் சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மீது
ஒளி உதித்தது.”#4:16 ஏசா. 9:1,2
17அந்தவேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக இராச்சியம் சமீபமாய் இருக்கின்றது” எனப் பகிரங்கமாக அறிவிக்கத் தொடங்கினார்.
இயேசு முதல் சீடர்களை அழைத்தல்
18இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய சகோதரர்கள் இருவரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். 19இயேசு அவர்களிடம், “என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன்” என்றார். 20உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
21அவர் அங்கிருந்து செல்லும்போது, வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். 22உடனே அவர்கள் படகையும், தங்கள் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.
இயேசு நோயாளர்களைக் குணமாக்குதல்
23இயேசு கலிலேயா எங்கும் சென்று, அவர்களுடைய யூத மன்றாடும் ஆலயங்களில் கற்பித்து, இராச்சியத்தின் நற்செய்தியை அறிவித்தார். அத்துடன் மக்களுக்கு இருந்த எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார். 24அவரைப்பற்றிய செய்தி சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு வியாதி உள்ளவர்களையும், வேதனை உள்ளவர்களையும், பேய் பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர் அவர்களைக் குணமாக்கினார். 25கலிலேயா, தெக்கப்போலி,#4:25 தெக்கப்போலி – இதன் பொருள் பத்துப் பட்டணங்கள். எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுகரையில் இருந்தும் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
மத்தேயு 4: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.