மத்தேயு 8

8
தொழுநோயுள்ளவன்
1இயேசு மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 2அப்போது, தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்து, அவர் முன் முழந்தாழிட்டு, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
3இயேசு தன் கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்று சொன்னார். உடனே, அவன் தனது தொழுநோயிலிருந்து குணமாகி சுத்தமானான். 4அப்போது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, நீ குணமடைந்ததற்கான ஒரு அத்தாட்சியாய் மோசே கட்டளையிட்ட காணிக்கைப் பலிகளைச்#8:4 பலிகளை – கிரேக்க மொழியில், காணிக்கை என்று உள்ளது. செலுத்து”#8:4 லேவி. 14:1-32 என்றார்.
நூற்றுக்குத் தளபதியின் விசுவாசம்
5இயேசு கப்பர்நகூமிற்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தளபதி உதவி கேட்டு அவரிடம் வந்து, 6“ஆண்டவரே! வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.
7இயேசு அவனிடம், “நான் அங்கே வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
8நூற்றுக்குத் தளபதி அதற்குப் பதிலாக, “ஆண்டவரே! நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான். 9ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்” என்றான்.
10இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தவராய், தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் கண்டதில்லை. 11நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வந்து, பரலோக அரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விருந்து வைபவத்தில் பங்கு பெறுவார்கள். 12ஆனால் அந்த அரசுக்கு உரிய குடிமக்களோ,#8:12 அரசுக்கு உரிய குடிமக்களோ – கிரேக்க மொழியில், அரசுக்குரிய மகன்கள். இது அக்காலத்திலிருந்த இஸ்ரயேலர்களைக் குறிக்கிறது. வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.
13அதன்பின் இயேசு நூற்றுக்குத் தளபதியிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு நடக்கட்டும்” என்றார். உடனடியாக அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.
இயேசு அநேகரைக் குணமாக்குதல்
14இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமி காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை கண்டார். 15அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
16பொழுது சாயும் வேளையானபோது, பேய் பிடித்திருந்த பலரை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே கட்டளையிட்டு அந்த ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.
17“அவர் நம்மை பலவீனப்படுத்தும் வியாதிகளை ஏற்றுக்கொண்டு,
நமது நோய்களைச் சுமந்தார்”#8:17ஏசா. 53:4
என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டவை நிறைவேறும்படி இப்படி நடந்தது.
இயேசுவை பின்பற்ற விரும்புகின்றவர்களுக்கான சவால்
18தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி கட்டளையிட்டார். 19அப்போது நீதிச்சட்ட ஆசிரியன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
20இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” என்றார்.
21இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்து வர அனுமதி தாரும்” என்றான்.
22அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள்” என்றார்.
இயேசு புயலை அமைதிப்படுத்துதல்
23அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரைப் பின்தொடர்ந்து அவரது சீடர்களும் ஏறினார்கள். 24அப்போது திடீரென கடும் புயல் காற்று கடலின் மீது வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதின. இயேசுவோ தூங்கிக் கொண்டிருந்தார். 25சீடர்கள் அவரிடம் சென்று, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் மூழ்கி அழியப் போகின்றோம்!” என்று சொன்னார்கள்.
26அதற்கு அவர், “விசுவாசம் குறைந்தவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்து கொண்டார். அப்போது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
27அவர்கள் வியப்படைந்து, “காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எப்படிப்பட்டவரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
பேய் பிடித்த இருவர் குணமடைதல்
28அவர் மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய#8:28 கதரேனருடைய – சில பிரதிகளில் கெரசேனர் அல்லது கெர்கெசேனர் என்றுள்ளது பிரதேசத்திற்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய் போக முடியாதபடி, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள். 29அவர்கள் இருவரும் இயேசுவை நோக்கி, “இறைவனின் மகனே! எங்களிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைத் துன்புறுத்தவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.
30அவர்களுக்கு சற்று தூரத்தில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. 31அந்த பேய்கள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதாக இருந்தால், பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பி விடும்” என கெஞ்சிக் கேட்டன.
32அவர் அவைகளிடம், “போங்கள்” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அந்தப் பன்றிகள், மலைச்சரிவினூடாக, கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின. 33பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் விரைந்து ஓடிப் போய், பேய் பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். 34அப்போது பட்டணத்திலுள்ள எல்லோரும் இயேசுவைச் சந்திக்க புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பிரதேசத்தைவிட்டு போய்விடும்படி, வேண்டிக் கொண்டார்கள்.

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

மத்தேயு 8: TRV

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക