YouVersion လိုဂို
ရွာရန္ အိုင္ကြန္

யோவான் 5

5
நோயுற்றவன் குணமடைதல்
1இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது, அப்போது இயேசு எருசலேமுக்குச் சென்றார். 2எருசலேமிலே “ஆட்டு வாசல்” என்ற இடத்தின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரேய மொழியிலே பெதஸ்தா#5:2 பெதஸ்தா – சில மொழிபெயர்ப்புகளில் பெத்சதா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. 3அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுடையோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 4சில வேளைகளில், கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கி வந்து, அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே, அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் குணமடைவான்.#5:4 சில மூலபிரதிகளில் 4 ஆம் வசனம் காணப்படுவதில்லை 5அங்கிருந்த ஒருவன், முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான். 6இயேசு அவனைக் கண்டு, அவன் அங்கே அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்து அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு உதவி செய்ய எனக்கு ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், எனக்கு முன் வேறொருவன் இறங்கி விடுகிறான்” என்றான்.
8அப்போது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். 9உடனே, அந்த மனிதன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்றான்.
இது ஒரு ஓய்வுநாளில் நிகழ்ந்தது. 10எனவே யூதர், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவதை, நீதிச்சட்டம் தடைசெய்கின்றது” என்றார்கள்.
11அதற்கு அவன், “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
12எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று, உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.
13குணமடைந்தவனுக்கோ, தன்னைக் குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில், இயேசு அந்த மக்கள் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றிருந்தார்.
14பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “இதோ பார், நீ குணமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமான ஏதோவொன்று உனக்கு நேரிடலாம்” என்றார். 15பின்பு அந்த மனிதன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என யூதருக்குச் சொன்னான்.
இறைமகனின் மூலமாக வாழ்வு
16இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். 17இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கின்றார்; நானும் வேலை செய்கின்றேன்” என்றார். 18அவர் ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தகப்பன் என்றும் சொல்லி, தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர்கள் அவரைக் கொலை செய்ய இன்னும் அதிக முயற்சி செய்தார்கள்.
19இயேசு அவர்களிடம்: “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எவைகளையெல்லாம் பிதா செய்கின்றதை மகன் காண்கின்றாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்ய மாட்டார்; பிதா எவைகளைச் செய்கின்றாரோ, அவைகளையே மகனும் செய்கின்றார். 20ஏனெனில், பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி, அவர் இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார். 21பிதா மரணித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு வாழ்வைக் கொடுக்கின்றார். 22மேலும், பிதா ஒருவரையும் நியாயம் தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார். 23எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவது போல, மகனையும் கனம் பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்குக் கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான்.
24“நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கின்றவன் எவனோ, அவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறான். 25நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். ஒரு காலம் வருகின்றது, அது இப்பொழுதே வந்துவிட்டது. மரணித்தவர்கள், இக்காலத்திலேதான் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கின்றவர்கள் வாழ்வு பெறுவார்கள். 26பிதா தம்மில்தாமே நித்திய வாழ்வுள்ளவராய் இருப்பது போல, மகனும் தம்மில்தாமே நித்திய வாழ்வுள்ளவராய் இருக்கும்படி செய்திருக்கின்றார். 27அவர் மனுமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும், பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார்.
28“இதைக் குறித்து வியப்படைய வேண்டாம். ஏனெனில் காலம் வருகின்றது, கல்லறைகளில் இருக்கின்றவர்கள் எல்லோரும் அவருடைய குரலைக் கேட்டு, 29வெளியே வருவார்கள். நற்செயல்களைச் செய்தவர்கள், வாழ்வு பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள், தண்டனைத்தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். 30சுயமாய் நான் எதையும் செய்வதில்லை; பிதா சொல்கின்றபடி மட்டுமே, நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கின்றேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில், நான் என்னைப் பிரியப்படுத்த அல்ல, என்னை அனுப்பியவரை பிரியப்படுத்தவே நாடுகிறேன்.
இயேசுவைக் குறித்த சாட்சிகள்
31“என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. 32எனக்காக சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கின்றார். என்னைப் பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன்.
33“நீங்கள் யோவான் ஸ்நானகனிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் உண்மைக்காக சாட்சி கொடுத்தான். 34மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே, நான் இதைச் சொல்கின்றேன். 35யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் சிறிது காலம் அவனுடைய வெளிச்சத்தில் விருப்பத்துடன் மகிழ்ந்திருந்தீர்கள்.
36“யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மேன்மையான சாட்சி எனக்கு இருக்கின்றது. நான் செய்து முடிக்கும்படி, பிதா எனக்கு கொடுத்திருக்கும் வேலையை நான் செய்கின்றேன். நான் செய்யும் அந்த வேலையே, பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றது. 37என்னை அனுப்பிய பிதா தாமே, என்னைக் குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, 38அவருடைய வார்த்தை உங்களில் நிலைத்திருப்பதும் இல்லை. ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் விசுவாசியாமல் இருக்கின்றீர்கள். 39நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கின்றீர்கள். ஏனெனில், அவற்றில் நித்திய வாழ்வு உண்டு என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. 40ஆயினும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, என்னிடம் வர மறுக்கிறீர்கள்.
41“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்வதில்லை. 42உங்கள் இருதயத்தில், இறைவன் மீது அன்பில்லை என்பதை நான் அறிவேன். 43நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44ஒரே இறைவனிடமிருந்து வரும் புகழை நாடாமல், ஒருவர் மற்றொருவரிடமிருந்து வரும் புகழை நாடுகின்ற நீங்கள் எப்படி என்னை விசுவாசிப்பீர்கள்?
45“பிதாவுக்கு முன்பாக, நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவார். 46நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறார். 47அவர் எழுதி வைத்திருப்பதையே விசுவாசிக்காத நீங்கள், நான் சொல்வதை எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.

လက္ရွိေရြးခ်ယ္ထားမွု

யோவான் 5: TRV

အေရာင္မွတ္ခ်က္

မၽွေဝရန္

ကူးယူ

None

မိမိစက္ကိရိယာအားလုံးတြင္ မိမိအေရာင္ခ်ယ္ေသာအရာမ်ားကို သိမ္းဆည္းထားလိုပါသလား။ စာရင္းသြင္းပါ (သို႔) အေကာင့္ဝင္လိုက္ပါ