லூக்கா 19
19
வரி சேகரிப்பவனாகிய சகேயு
1இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். 2அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் வரி சேகரிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். 3அவன், இயேசு யார் எனப் பார்க்க விரும்பினான். ஆனால் அவன் குள்ளமாயிருந்தபடியால், அந்த மக்கள் கூட்டத்தில் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை. 4எனவே, அந்த வழியாக வந்து கொண்டிருந்த இயேசுவைப் பார்ப்பதற்காக, முன்னால் ஓடிப் போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக் கொண்டான்.
5இயேசு அவ்விடத்திற்கு வந்தபோது, மேலே அண்ணாந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்க வேண்டும்” என்று அவனுக்குச் சொன்னார். 6அவன் உடனே இறங்கி வந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.
7எல்லா மக்களும் இதைக் கண்டு, “ஒரு பாவியின் வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
8ஆனால் சகேயுவோ எழுந்து நின்று ஆண்டவரிடம், “ஆண்டவரே! இதோ, என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றேன். நான் யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான்.
9அப்போது இயேசு அவனைப் பார்த்து, “இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில் இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. 10வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்” என்றார்.
பத்து மினா பணத்தின் உவமை
11அவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்; அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு உடனடியாகவே வரப் போகின்றது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், அவர் இதைச் சொன்னார்: 12“அரச குலத்தைச் சேர்ந்த ஒருவன், தான் ஒரு அரசனாக நியமனம் பெற்றுத் திரும்பி வர, தூர நாடொன்றுக்குப் புறப்பட்டான். 13அப்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப் பேரை அழைத்து, பத்து மினா பணத்தில்#19:13 “ஒரு மினா” ஒருவருடைய மூன்று மாதச் சம்பளம் அவர்களுக்கு ஆளுக்கொரு பணத்தைக் கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.
14“ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இந்த மனிதன் எங்களை அரசாளுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
15“ஆயினும், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுத் திரும்பி வந்தபோது, தான் பணம் கொடுத்த வேலையாட்கள், வியாபாரம் செய்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிவதற்கு அவர்களை அழைத்தான்.
16“முதலாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு, இன்னும் பத்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.
17“அதற்கு அவனுடைய எஜமான், ‘நல்ல பணியாளனே! நன்றாய் செய்தாய். நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான்.
18“இரண்டாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு இன்னும் ஐந்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.
19“அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான்.
20“பின்பு இன்னொருவன் வந்து, ‘ஐயா, இதோ நீர் தந்த ஒரு மினா பணம்; நான் அதை ஒரு கைக்குட்டையில் சுற்றி வைத்திருந்தேன். 21நீர் கடினமான ஒரு மனிதர், ஆனபடியால் நான் பயந்திருந்தேன். நீர் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவர், விதைக்காததை அறுவடை செய்கின்றவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான்.
22“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கின்றேன்; நான் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவனும், விதைக்காததை அறுவடை செய்கின்றதுமான, கடினமான ஒரு மனிதன் என்று அறிந்திருந்தாயே. 23அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வங்கியில் சேர்த்து வைக்கவில்லை? நான் திரும்பி வரும்போது, அந்தப் பணத்தை வட்டியோடு எடுத்திருப்பேனே’ என்றான்.
24“பின்பு அவன், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த மினா பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினா வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள்’ என்றான்.
25“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து மினா பணம் இருக்கின்றதே’ என்றார்கள்.
26“அதற்கு அவன், ‘நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உள்ளவன் ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 27நான் தங்கள் மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை எனக்கு முன்பாகக் கொன்று போடுங்கள்’ என்றான்.”
எருசலேமில் இயேசு
28இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, எருசலேமை நோக்கி முன்னே நடந்து சென்றார். 29அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு அருகில் வந்தபோது, தம்முடைய சீடர்களில் இருவரை அழைத்து, 30“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச் சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். 31யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்கு தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32இப்படியாக அனுப்பப்பட்டவர்கள் போனபோது, அவர் தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே கழுதைக்குட்டி அங்கே இருப்பதைக் கண்டார்கள். 33அவர்கள் அதை அவிழ்க்கின்றபோது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
34அதற்கு அவர்கள், “ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.
35அவர்கள் அதை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் மேலாடைகளை அந்தக் கழுதைக்குட்டியின் மீது போட்டு, அதன்மீது இயேசுவை உட்கார வைத்தார்கள். 36அவர் போய்க் கொண்டிருக்கையில், மக்கள் தங்கள் மேலாடைகளை வீதியிலே விரித்தார்கள்.
37ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகின்ற, பாதைக்கு அருகில் இயேசு வந்தபோது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:
38“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”#19:38 சங். 118:26;
39மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.
40அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்கள் பேசாமல் மௌனமாய் இருந்தால், இந்தக் கற்களே சத்தமிடும்” என்றார்.
41அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, 42“உங்களுக்குச் சமாதானத்தைத் தரக் கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்பொழுதோ, அது உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கின்றது. 43உங்கள் பகைவர்கள், பட்டணத்தைச் சுற்றி போர்க்கள அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கி, 44உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கின்ற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிக்கும் நாட்கள் வரும். அத்துடன், ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதபடி, பட்டணத்தைத் தரைமட்டமாக்கி விடுவார்கள். ஏனெனில், இறைவனின் வருகையை#19:44 இறைவனின் வருகையை – இறைவன் உங்களை சந்திக்க வந்த நாட்களை என்பதே இதன் அர்த்தம். நீங்கள் அறிந்துகொள்ளவில்லையே” என்றார்.
ஆலயத்தில் இயேசு
45பின்பு அவர் ஆலய வளாகத்துக்குள் போய், அங்கே பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். 46அவர் அவர்களிடம், “ ‘எனது வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதியிருக்கிறதே;#19:46 ஏசா. 56:7 ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்”#19:46 எரே. 7:11 என்றார்.
47அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். 48இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
လက္ရွိေရြးခ်ယ္ထားမွု
லூக்கா 19: TRV
အေရာင္မွတ္ခ်က္
မၽွေဝရန္
ကူးယူ
မိမိစက္ကိရိယာအားလုံးတြင္ မိမိအေရာင္ခ်ယ္ေသာအရာမ်ားကို သိမ္းဆည္းထားလိုပါသလား။ စာရင္းသြင္းပါ (သို႔) အေကာင့္ဝင္လိုက္ပါ
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.