Logótipo YouVersion
Ícone de pesquisa

லூக் 2

2
அத்தியாயம் 2
இயேசுவின் பிறப்பு
1அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. 2சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 3எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். 4அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, 5கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். 6அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. 7அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.
மேய்ப்பர்களும் தேவதூதர்களும்
8அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 9அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 13உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து:
14“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,
பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 16வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். 17பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள். 18மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 19மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். 20மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
இயேசுவின் விருத்தசேதனம்
21குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள். 22மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு, 23முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும், 24கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள். 25அப்பொழுது சிமியோன் என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பவர் வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தான்; பரிசுத்த ஆவியானவர் அவனோடுகூட இருந்தார். 26கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காண்பதற்கு முன்பே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவராலே அவனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது. 27சிமியோன் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் தேவாலயத்திற்கு வந்தான். இயேசு என்னும் குழந்தைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்ய அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவரும்போது, 28சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி
நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
30யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும்,
உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி,
32அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான்.
33இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள். 34பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளைப் பார்த்து: இதோ, இந்தக் குழந்தையினாலே, இஸ்ரவேலில் அநேகர் தேவனைவிட்டு விலகுவதற்கும், தேவனிடத்தில் வருவதற்கும், மக்களால் விரோதமாகப் பேசப்படும் அவர்களை எச்சரிக்கும் ஒரு அடையாளமாகவும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 35முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான். 36ஆசேருடைய கோத்திரத்தைச் சேர்ந்த, பானுவேலின் மகளாகிய அன்னாள் என்ற பெயர்கொண்ட வயதான ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் திருமணம்செய்து ஏழுவருடங்கள்மட்டுமே புருஷனோடு வாழ்ந்தாள். 37எண்பத்து நான்கு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டுப் போகாமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். 38அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள். 39கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள். 40அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
தேவாலயத்தில் சிறுவன் இயேசு
41இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். 42இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். 43பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது. 44இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள். 45அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 46மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள். 47இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 48இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். 49அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். 50ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 51பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். 52இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

Atualmente selecionado:

லூக் 2: IRVTam

Destaque

Partilhar

Copiar

None

Quer salvar os seus destaques em todos os seus dispositivos? Faça o seu registo ou inicie sessão