1 யோவா 5:1-12

1 யோவா 5:1-12 IRVTAM

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான். நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம். தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாக இருப்பதினால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.