1 யோவான் 5:1-12

1 யோவான் 5:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

1 யோவான் 5:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கிற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான். நாம் இறைவனில் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதினாலேயே இறைவனின் பிள்ளைகளில் நாம் அன்பாயிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். இறைவனில் அன்பாயிருப்பது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு பாரமானவையும் அல்ல. ஏனெனில், இறைவனால் பிறந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவை விசுவாசித்து, உலகத்தை மேற்கொள்கிறார்கள். நமது விசுவாசமே உலகத்தை மேற்கொண்ட வெற்றி. யார் உலகத்தை மேற்கொள்கிறார்கள்? இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவே தண்ணீரினாலும், இரத்தத்தினாலும், வந்தார். அவர் தண்ணீர் மூலமாக மட்டுமல்ல, தண்ணீனால் மாத்திரமல்ல, இரத்தத்தினாலும் வந்தார். இது சத்தியமென்று பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார். ஏனெனில், ஆவியானவர் சத்தியமுள்ளவர். ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன: ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும், ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறோமே, அப்படியானால் இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! ஏனெனில், இதுவே இறைவன் தமது மகனைக்குறித்துக் கொடுத்த சாட்சியாய் இருக்கிறது. இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனை பொய்யராக்கியிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் தமது மகனாகிய கிறிஸ்துவைக்குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. இறைவனுடைய மகனை தன் உள்ளத்தில் உடையவர்கள் யாரோ அவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். இறைவனுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியவாழ்வு இல்லாதவர்கள்.

1 யோவான் 5:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான். நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம். தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாக இருப்பதினால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

1 யோவான் 5:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான். இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.