அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது. சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான். உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான். உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான். உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான். நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.
வாசிக்கவும் 1 இராஜா 16
கேளுங்கள் 1 இராஜா 16
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 இராஜா 16:19-33
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
Videos