1 இராஜாக்கள் 16:19-33
1 இராஜாக்கள் 16:19-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சிம்ரி தான் செய்த பாவங்களினாலும், அவன் யெரொபெயாமின் பாவங்களைத் தானும் செய்து, இஸ்ரயேல் மக்களையும் அவனுடைய பாவத்தில் வழிநடத்தியபடியாலும், யெகோவாவினுடைய பார்வையில் தீமை செய்தபடியினாலுமே இது நடந்தது. சிம்ரியின் ஆட்சிக் காலத்தின் மிகுதி நிகழ்வுகளும், அவனுடைய கலகமும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அதன்பின் இஸ்ரயேலர் இரண்டு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகன் திப்னியையும், மற்றப் பிரிவினர் உம்ரியையும் அரசனாக்குவதற்கு ஆதரவளித்தனர். கீனாத்தின் மகன் திப்னிக்குச் சார்பானவர்களைவிட உம்ரிக்குச் சார்பானவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே திப்னி இறந்தான், அதன்பின் உம்ரி அரசனானான். யூதாவில் ஆசா அரசாண்ட முப்பத்தோராம் வருடத்தில் உம்ரி இஸ்ரயேலின் அரசனாக வந்து, பன்னிரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இதில் ஆறு வருடங்கள் திர்சாவில் இருந்து அரசாண்டான். இதன்பின் சேமேர் என்பவனிடமிருந்து சமாரிய மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கினான். அந்த மலையில் ஒரு பட்டணத்தைக் கட்டி, முந்தைய சொந்தக்காரனான சேமேரின் பெயரின்படி அதை சமாரியா என அழைத்தான். ஆனால் உம்ரியோ தன் முன்னோரைவிட அதிக பாவம் செய்து யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளில் நடந்து இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய பாவத்தையும் செய்தான். இதனாலேயே பயனற்ற விக்கிரகங்களினால் இஸ்ரயேலர் தங்கள் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டினார்கள். உம்ரியின் ஆட்சியின் மிகுதி நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான். யூதாவின் அரசன் ஆசாவின் முப்பத்தி எட்டாம் வருடத்தில் உம்ரியின் மகன் ஆகாப் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் இருபத்திரண்டு வருடங்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரயேலை அரசாண்டான். உம்ரியின் மகன் ஆகாப் தனக்கு முன் அரசாண்ட எல்லோரைப் பார்க்கிலும், யெகோவாவின் பார்வையில் அதிக தீமையைச் செய்தான். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைத் தான் செய்வது ஒரு அற்பமான செயல் எனக் கருதியது மட்டுமல்ல; சீதோனியரின் அரசன் ஏத்பாகாலின் மகள் யேசபேலையும் திருமணம் செய்து, பாகாலுக்கு சேவைசெய்து அதை வணங்கினான். சமாரியாவில் அவன் கட்டிய பாகாலின் கோவிலில் பாகாலுக்கென்று ஒரு பலி மேடையையும் அமைத்தான். அதோடுகூட ஆகாப், அசேரா விக்கிரக தூணையும் நிறுத்தி, தனக்கு முன் இருந்த எல்லா இஸ்ரயேல் அரசரைக் காட்டிலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டும்படி அதிகமானதைச் செய்தான்.
1 இராஜாக்கள் 16:19-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது. சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான். உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான். உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான். உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான். நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.
1 இராஜாக்கள் 16:19-33 பரிசுத்த பைபிள் (TAERV)
தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் குமாரனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் ராஜாவாக்க விரும்பினார்கள். ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி ராஜாவானான். யூதாவின் ராஜாவாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் ராஜாவாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான். உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது குமாரன் ஆகாப் புதிய ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய ராஜாவானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
1 இராஜாக்கள் 16:19-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது. சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப்பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப்போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டு, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான். உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான். உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.