1 சாமு 28:1-7

1 சாமு 28:1-7 IRVTAM

அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான். தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான். சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான். பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூனேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள். சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது. சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.