1 சாமுவேல் 28:1-7

1 சாமுவேல் 28:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களை எதிர்த்துப் போரிடும்படி பெலிஸ்தியர் படை திரட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “நீயும் உனது மனிதரும் எனது படைவீரருடன் சேர்ந்து வரவேண்டும் என்பதை அறிந்துகொள்” என்றான். அதற்குத் தாவீது, “உம்முடைய அடியவனால் என்ன செய்யமுடியும் என்பதை நீர் அறிந்துகொள்வீர்” என்றான். எனவே தாவீதிடம் ஆகீஸ், “மிக நல்லது, உன்னை என் வாழ்நாள் முழுவதும் என் மெய்க்காவலனாக்குவேன்” என்றான். அந்நாட்களில் சாமுயேல் இறந்திருந்தான். முழு இஸ்ரயேலரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடி அவனுடைய சொந்த பட்டணமான ராமாவிலே அவனை அடக்கம்பண்ணியிருந்தார்கள். சவுல் குறிசொல்லுகிறவர்களையும், ஆவியுடன் தொடர்புடையோரையும் தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டிருந்தான். பெலிஸ்தியரும் ஒன்றுகூடி வந்து சூனேமிலே முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது சவுல் இஸ்ரயேல் அனைவரையும் ஒன்றுசேர்த்து கில்போவாவிலே முகாமிட்டிருந்தான். சவுல் பெலிஸ்தியரின் இராணுவத்தைக் கண்டவுடன் பயந்தான். அவனுடைய மனம் திகிலடைந்தது. சவுல் யெகோவாவிடம் விசாரித்தான். ஆனால் அவர் கனவுகளினாலோ, ஊரீமினாலோ, இறைவாக்கினராலோ அவனுக்குப் பதில் கொடுக்கவில்லை. எனவே சவுல் தன் வேலையாட்களிடம், “நான் போய் விசாரிக்கும்படி, நீங்கள் போய் குறிசொல்லுகிற ஒருத்தியைத் தேடிப் பாருங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எந்தோரிலே ஒருத்தி இருக்கிறாள்” என்றார்கள்.

1 சாமுவேல் 28:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான். தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான். சாமுவேல் இதற்கு முன்பே இறந்துபோனான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவனுடைய ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் செய்தார்கள். சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டான். பெலிஸ்தர்கள் கூடிவந்து, சூனேமிலே முகாமிட்டார்கள்; சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே முகாமிட்டார்கள். சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது. சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.

1 சாமுவேல் 28:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான். தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான். ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான். சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய் மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர். சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான். பெலிஸ்தர் போருக்குத் தயாரானார்கள். அவர்கள் சூநேமிலே கூடி முகாமிட்டு தங்கினார்கள். சவுல் இஸ்ரவேலரையெல்லாம் கூட்டி கில்போவாவில் முகாமிட்டான். சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான். அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.

1 சாமுவேல் 28:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான். பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.