2 நாளா 11:11-23

2 நாளா 11:11-23 IRVTAM

அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும், யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள். இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள். ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான். இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான். ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 நாளா 11:11-23