2 நாளாகமம் 11:11-23

2 நாளாகமம் 11:11-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும், யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள். லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதா தேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள். இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள். ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான். இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள். அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான். ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

2 நாளாகமம் 11:11-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் அங்குள்ள பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவற்றிற்கு தளபதிகளை நியமித்தான். அவர்களுக்கான உணவையும், ஒலிவ எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் கொடுத்தான். அவன் எல்லாப் பட்டணங்களிலும் கேடயங்களையும், ஈட்டிகளையும் வைத்து அவற்றை மிகவும் பலப்படுத்தினான். அப்படியே யூதாவும், பென்யமீனும் அவனுடையதாயிற்று. இஸ்ரயேல் எங்குமுள்ள ஆசாரியரும், லேவியர்களும் அவர்களுடைய எல்லைகளிலிருந்து அவனுக்கு ஆதரவு வழங்கினர். லேவியர் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் மகன்களும் புறக்கணித்ததால், தங்கள் விளைச்சல் நிலங்களையும், சொத்துக்களையும்விட்டு யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். ஆனால் யெரொபெயாம் தான் செய்திருந்த வழிபாட்டு மேடைகளுக்கும், ஆடு, கன்றுக்குட்டி விக்கிரகங்களுக்குமென தனது சொந்த ஆசாரியர்களை நியமித்தான். இஸ்ரயேலர் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடவேண்டும் எனத் தங்கள் இருதயத்தில் நினைத்தவர்கள், தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்கென லேவியர்களைப் பின்பற்றி எருசலேமுக்குப் போனார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று வருடங்கள் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு உதவிசெய்து, யூதாவின் அரசாட்சியை நிலைநிறுத்திப் பெலப்படுத்தினார்கள்; இந்த மூன்று வருடங்களும் அவர்கள் தாவீது, சாலொமோன் நடந்த வழிகளில் நடந்தார்கள். ரெகொபெயாம் மகலாத்தைத் திருமணம் செய்தான். இவள் தாவீதின் மகன் எரிமோத்திற்கும் ஈசாயின் மகனான எலியாபின் மகள் அபியாயேலுக்கும் பிறந்தவள். மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். பின்பு அவன் அப்சலோமின் மகளான மாக்காளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித் ஆகியோரைப் பெற்றாள். ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வைப்பாட்டிகள் எவரையும்விட, அப்சலோமின் மகளான மாக்காள்மீதே அன்பாயிருந்தான். அவனுக்கு எல்லாமாக மொத்தம் பதினெட்டு மனைவிகளும், அறுபது வைப்பாட்டிகளும், இருபத்தெட்டு மகன்களும், அறுபது மகள்களும் இருந்தார்கள். ரெகொபெயாம் மாக்காளின் மகன் அபியாவை அரசனாக்கும்படி, அவனுடைய சகோதரருக்குள் முதன்மையான இளவரசனாக்கினான்; அவனையே அரசனாக்க வேண்டுமென்றிருந்தான். அவன் ஞானமாய் நடந்து, தன் மகன்களில் சிலரை பென்யமீன், யூதா நாடுகளெங்குமுள்ள அரணுள்ள பட்டணங்களில் பிரிந்து பரவலாய் இருக்கச்செய்தான். அவன் அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருட்களையும், அவர்களுக்கென அநேக மனைவிகளையும் கொடுத்தான்.

2 நாளாகமம் 11:11-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும், யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள். இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள். ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான். இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள். ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான். ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

2 நாளாகமம் 11:11-23 பரிசுத்த பைபிள் (TAERV)

ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான். இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள். லேவியர்கள் தம் புல்வெளிகளையும் வயல்களையும் விட்டுவிட்டு யூதாவுக்கும் எருசலேமிற்கும் வந்தனர். காரணம், யெரொபெயாமும் அவனது குமாரர்களும், லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதை மறுத்தனர். யெரொபெயாம் தன் சொந்த ஆசாரியர்களையே மேடைகளில் பலிசெலுத்த தேர்ந்தெடுத்தான். அவன் செய்த ஆடு மற்றும் கன்றுக் குட்டியின் விக்கிரகங்களை அந்த மேடைகளில் அமைத்தான். லேவியர்கள் இஸ்ரவேலை விட்டு விலகியதும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மீது நம்பிக்கைகொண்ட இஸ்ரவேலின் அனைத்துக் கோத்திரங்களிலுமிருந்த ஜனங்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை செலுத்த எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர். ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் குமாரன். அபியாயேல் எலியாப்பின் குமாரத்தி. எலியாப் ஈசாயின் குமாரன். மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் குமாரர்களைப் பெற்றாள். பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள். ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 குமாரர்களும், 60 குமாரத்திகளும் இருந்தனர். ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை ராஜாவாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான். ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் குமாரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.