2 நாளா 21:1-11

2 நாளா 21:1-11 IRVTAM

யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான். அவனுக்கு யோசபாத்தின் மகன்களாகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர்கள் இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் மகன்கள். அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான். யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார். அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான். ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள். அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிமக்களை வழிவிலகச்செய்து, யூதாவையும் அதற்குத் தூண்டிவிட்டான்.