2 நாளாகமம் 21:1-11

2 நாளாகமம் 21:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான். அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர். அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான். யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார். அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான். ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.

2 நாளாகமம் 21:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான். யோசபாத்தின் மகன்களான யெகோராமின் சகோதரர் அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாயேல், செபத்தியா ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேல் அரசன் யோசபாத்தின் மகன்கள். அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு வெள்ளி, தங்கம் விலையுயர்ந்த பொருட்கள் ஆகிய அநேகம் அன்பளிப்புகளைக் கொடுத்திருந்தான். அவன் யூதாவின் அரண்செய்த பட்டணங்களையும் கொடுத்திருந்தான். ஆனால் யெகோராம் அவனுடைய மூத்த மகன் ஆகையினால் அவனுடைய ஆட்சியை அவன் யெகோராமுக்கு கொடுத்தான். யெகோராம் தனது தகப்பனின் அரசில் தன்னை உறுதியாக நிலைப்படுத்தியபின், அவன் தன் சகோதரர் எல்லோரையும் அவர்களுடன் இஸ்ரயேலின் இளவரசர்களில் சிலரையும் வாளால் கொன்றான். யெகோராம் அரசனானபோது முப்பத்திரண்டு வயதுடையவனாய் இருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் ஒரு மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இருந்தாலும், யெகோவா தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் ஒரு குலவிளக்கை என்றென்றும் வைத்திருப்பேன் என வாக்குப்பண்ணி, அவனுடன் செய்த உடன்படிக்கையின் நிமித்தம் யெகோவா தாவீதின் சந்ததியை அழித்துப்போட விருப்பமில்லாதிருந்தார். யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர். எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான். இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெகோராம் தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைவிட்டு விலகியபடியால், அக்காலத்தில் லிப்னாவைச் சேர்ந்தவர்கள் கலகம் செய்தார்கள். அவன் யூதாவின் குன்றுகளில் வழிபாட்டு மேடைகளையும் கட்டி வழிபடுவதன்மூலம், எருசலேம் மக்களை வேசித்தனத்தில் ஈடுபடச் செய்தான். இவ்வாறு யூதாவை வழிதவறச் செய்தான்.

2 நாளாகமம் 21:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான். அவனுக்கு யோசபாத்தின் மகன்களாகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர்கள் இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் மகன்கள். அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான். யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார். அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான். ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள். அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிமக்களை வழிவிலகச்செய்து, யூதாவையும் அதற்குத் தூண்டிவிட்டான்.

2 நாளாகமம் 21:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய ராஜா ஆனான். யோராம் யோசபாத்தின் குமாரன். அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் குமாரர்கள். யோசபாத் யூதாவின் ராஜா ஆவான். யோசபாத் தன் குமாரர்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த குமாரன். யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் குமாரத்தியை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார். யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.