2 நாளாகமம் 21:1-11

2 நாளாகமம் 21:1-11 TCV

அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான். யோசபாத்தின் மகன்களான யெகோராமின் சகோதரர் அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாயேல், செபத்தியா ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேல் அரசன் யோசபாத்தின் மகன்கள். அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு வெள்ளி, தங்கம் விலையுயர்ந்த பொருட்கள் ஆகிய அநேகம் அன்பளிப்புகளைக் கொடுத்திருந்தான். அவன் யூதாவின் அரண்செய்த பட்டணங்களையும் கொடுத்திருந்தான். ஆனால் யெகோராம் அவனுடைய மூத்த மகன் ஆகையினால் அவனுடைய ஆட்சியை அவன் யெகோராமுக்கு கொடுத்தான். யெகோராம் தனது தகப்பனின் அரசில் தன்னை உறுதியாக நிலைப்படுத்தியபின், அவன் தன் சகோதரர் எல்லோரையும் அவர்களுடன் இஸ்ரயேலின் இளவரசர்களில் சிலரையும் வாளால் கொன்றான். யெகோராம் அரசனானபோது முப்பத்திரண்டு வயதுடையவனாய் இருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் ஒரு மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இருந்தாலும், யெகோவா தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் ஒரு குலவிளக்கை என்றென்றும் வைத்திருப்பேன் என வாக்குப்பண்ணி, அவனுடன் செய்த உடன்படிக்கையின் நிமித்தம் யெகோவா தாவீதின் சந்ததியை அழித்துப்போட விருப்பமில்லாதிருந்தார். யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர். எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான். இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெகோராம் தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைவிட்டு விலகியபடியால், அக்காலத்தில் லிப்னாவைச் சேர்ந்தவர்கள் கலகம் செய்தார்கள். அவன் யூதாவின் குன்றுகளில் வழிபாட்டு மேடைகளையும் கட்டி வழிபடுவதன்மூலம், எருசலேம் மக்களை வேசித்தனத்தில் ஈடுபடச் செய்தான். இவ்வாறு யூதாவை வழிதவறச் செய்தான்.