நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 21:1-11

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 21:1-11 TAERV

யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய ராஜா ஆனான். யோராம் யோசபாத்தின் குமாரன். அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் குமாரர்கள். யோசபாத் யூதாவின் ராஜா ஆவான். யோசபாத் தன் குமாரர்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த குமாரன். யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் குமாரத்தியை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார். யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.