2 நாளா 25:15-28

2 நாளா 25:15-28 IRVTAM

அப்பொழுது, யெகோவா அமத்சியாவின்மேல் கோபப்பட்டு, அவனிடத்திற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் மக்களை உமது கைக்குத் தப்புவிக்காமற்போன மக்களின் தெய்வங்களை நீர் ஏன் நம்பவேண்டும் என்றான். தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான். பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான். அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று கேட்கச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே போகும்போது ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. நீ ஏதோமியர்களை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளச் செய்தது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடு யூதாவும் விழுவதற்காக, பொல்லாப்பை ஏன் தேடிக்கொள்ளவேண்டும் என்று சொல்லச் சொன்னான். ஆனாலும் அமத்சியா கேட்காமற்போனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதால் அவர்களை அவர்களுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக தேவனாலே இப்படி நடந்தது. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள். யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக தோல்வியடைந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் மகனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலில் எப்பிராயீம் வாசல்துவங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு, தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமிடம் கிடைத்த சகல பொன்னையும், வெள்ளியையும், பணிமுட்டுகளையும், ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது. அமத்சியா யெகோவாவைவிட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்துகொண்டார்கள்; அதனால் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு, குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 நாளா 25:15-28