2 நாளாகமம் 25:15-28

2 நாளாகமம் 25:15-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான். தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான். பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான். அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச் சொன்னான். ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள். யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு, தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான். அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு, குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் 25:15-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் கோபம் அமத்சியாவுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அவர் அவனிடத்திற்கு ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன், “நீ ஏன் இந்த மக்களின் தெய்வங்களிடம் ஆலோசனை கேட்கிறாய். அவைகளால் தனது சொந்த மக்களை உன்னுடைய கையிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே” என்று கேட்டான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசகனாக உன்னை நாங்கள் நியமித்தோமா? நிறுத்து! நீ ஏன் வீணாக சாகவேண்டும்?” என்றான். எனவே இறைவாக்கினன் பேசுவதை சற்று நிறுத்தி, பின்பு அவன், “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவற்றைச் செய்தபடியால், இறைவன் உன்னை அழிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னான். பின்பு யூதாவின் அரசன் அமத்சியா தனது ஆலோசகர்களிடம் யோசனை கேட்டான். அதன்படி இஸ்ரயேலின் அரசனான யோவாஸுக்கு, “நீ வந்து என்னை முகமுகமாய் எதிர்கொள்” என சவால் விட்டான். இந்த யோவாஸ் யோவாகாஸின் மகன்; யோவாகாஸ் யெகூவின் மகன். ஆனால் இஸ்ரயேலின் அரசன் யோவாஸ், யூதாவின் அரசன் அமத்சியாவுக்கு மறுமொழியாக, “லெபனோனிலுள்ள முட்செடி, லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம் ஒரு செய்தி அனுப்பி, ‘உனது மகளை எனது மகனுக்குத் திருமணம் செய்துகொடு’ என்றது. அப்பொழுது லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் வந்து அந்த முட்செடியைத் தன் பாதத்தின்கீழ் மிதித்துப்போட்டது. நீ உனக்குள்ளேயே ஏதோமை தோற்கடித்தேன் என சொல்லிக்கொள்கிறாய். இப்பொழுது நீ இறுமாப்பும் பெருமையும் கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்றான். ஆயினும் அமத்சியா அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஏதோமிய தெய்வத்தைத் தேடியதனால், இறைவன் அவர்களை யோவாஸிடம் ஒப்புக்கொடுக்கும்படி அவ்விதமாய் செயல்பட்டார். எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷிலே ஒருவரையொருவர் எதிர்கொண்டார்கள். இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு ஓடினார்கள். இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் அரசன் யோவாஸ் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான். ஓபேத் ஏதோமின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த இறைவனின் ஆலயத்தில் காணப்பட்ட தங்கத்தையும், வெள்ளியையும், எல்லாப் பொருட்களையும் யோவாஸ் எடுத்துக்கொண்டான். அத்துடன் அரச அரண்மனை திரவியங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை யூதா, இஸ்ரயேல் அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. அமத்சியா யெகோவாவைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பிய காலத்திலிருந்து, எருசலேமிலுள்ளவர்கள் அவனுக்கெதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர். அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு, யூதாவின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.

2 நாளாகமம் 25:15-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, யெகோவா அமத்சியாவின்மேல் கோபப்பட்டு, அவனிடத்திற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் மக்களை உமது கைக்குத் தப்புவிக்காமற்போன மக்களின் தெய்வங்களை நீர் ஏன் நம்பவேண்டும் என்றான். தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான். பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைசெய்து, யெகூவின் மகனாக இருந்த யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான். அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடு என்று கேட்கச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே போகும்போது ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. நீ ஏதோமியர்களை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளச் செய்தது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடு யூதாவும் விழுவதற்காக, பொல்லாப்பை ஏன் தேடிக்கொள்ளவேண்டும் என்று சொல்லச் சொன்னான். ஆனாலும் அமத்சியா கேட்காமற்போனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதால் அவர்களை அவர்களுடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக தேவனாலே இப்படி நடந்தது. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள். யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக தோல்வியடைந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் மகனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலில் எப்பிராயீம் வாசல்துவங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு, தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமிடம் கிடைத்த சகல பொன்னையும், வெள்ளியையும், பணிமுட்டுகளையும், ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள செயல்பாடுகளான மற்ற காரியங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது. அமத்சியா யெகோவாவைவிட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்துகொண்டார்கள்; அதனால் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு, குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.

2 நாளாகமம் 25:15-28 பரிசுத்த பைபிள் (TAERV)

அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, “அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே!” என்றான். அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், ராஜா அவனிடம், “ராஜாவுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான். யூதாவின் ராஜாவாகிய அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் குமாரன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் குமாரன் ஆவான். பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் ராஜா. அமத்சியா யூதாவின் ராஜா. யோவாஸ், “லீபனோனில் உள்ள முட்செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது. நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான். ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும். ஆகையால் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது. இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான். யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் ராஜா எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான். பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத்ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான். யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் ஆவான். அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் ராஜாவுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர். பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.