நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 25:15-28

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 25:15-28 TAERV

அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, “அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே!” என்றான். அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், ராஜா அவனிடம், “ராஜாவுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான். யூதாவின் ராஜாவாகிய அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் குமாரன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் குமாரன் ஆவான். பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் ராஜா. அமத்சியா யூதாவின் ராஜா. யோவாஸ், “லீபனோனில் உள்ள முட்செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது. நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான். ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும். ஆகையால் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது. இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான். யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் ராஜா எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான். பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத்ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான். யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் ஆவான். அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் ராஜாவுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர். பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 25:15-28