2 நாளாகமம் 25:15-28

2 நாளாகமம் 25:15-28 TCV

யெகோவாவின் கோபம் அமத்சியாவுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அவர் அவனிடத்திற்கு ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன், “நீ ஏன் இந்த மக்களின் தெய்வங்களிடம் ஆலோசனை கேட்கிறாய். அவைகளால் தனது சொந்த மக்களை உன்னுடைய கையிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே” என்று கேட்டான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசகனாக உன்னை நாங்கள் நியமித்தோமா? நிறுத்து! நீ ஏன் வீணாக சாகவேண்டும்?” என்றான். எனவே இறைவாக்கினன் பேசுவதை சற்று நிறுத்தி, பின்பு அவன், “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவற்றைச் செய்தபடியால், இறைவன் உன்னை அழிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னான். பின்பு யூதாவின் அரசன் அமத்சியா தனது ஆலோசகர்களிடம் யோசனை கேட்டான். அதன்படி இஸ்ரயேலின் அரசனான யோவாஸுக்கு, “நீ வந்து என்னை முகமுகமாய் எதிர்கொள்” என சவால் விட்டான். இந்த யோவாஸ் யோவாகாஸின் மகன்; யோவாகாஸ் யெகூவின் மகன். ஆனால் இஸ்ரயேலின் அரசன் யோவாஸ், யூதாவின் அரசன் அமத்சியாவுக்கு மறுமொழியாக, “லெபனோனிலுள்ள முட்செடி, லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம் ஒரு செய்தி அனுப்பி, ‘உனது மகளை எனது மகனுக்குத் திருமணம் செய்துகொடு’ என்றது. அப்பொழுது லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் வந்து அந்த முட்செடியைத் தன் பாதத்தின்கீழ் மிதித்துப்போட்டது. நீ உனக்குள்ளேயே ஏதோமை தோற்கடித்தேன் என சொல்லிக்கொள்கிறாய். இப்பொழுது நீ இறுமாப்பும் பெருமையும் கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்றான். ஆயினும் அமத்சியா அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஏதோமிய தெய்வத்தைத் தேடியதனால், இறைவன் அவர்களை யோவாஸிடம் ஒப்புக்கொடுக்கும்படி அவ்விதமாய் செயல்பட்டார். எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷிலே ஒருவரையொருவர் எதிர்கொண்டார்கள். இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு ஓடினார்கள். இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் அரசன் யோவாஸ் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான். ஓபேத் ஏதோமின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த இறைவனின் ஆலயத்தில் காணப்பட்ட தங்கத்தையும், வெள்ளியையும், எல்லாப் பொருட்களையும் யோவாஸ் எடுத்துக்கொண்டான். அத்துடன் அரச அரண்மனை திரவியங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை யூதா, இஸ்ரயேல் அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. அமத்சியா யெகோவாவைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பிய காலத்திலிருந்து, எருசலேமிலுள்ளவர்கள் அவனுக்கெதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர். அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு, யூதாவின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 நாளாகமம் 25:15-28