2 கொரி 10:4-18

2 கொரி 10:4-18 IRVTAM

எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது. அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம். வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும். மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே. அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும். எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை. நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே. எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம். மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.