2 கொரிந்தியர் 10:4-18
2 கொரிந்தியர் 10:4-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம். வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன். மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே. அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன். ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப் பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம். ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
2 கொரிந்தியர் 10:4-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், உலகத்து மனிதர் உபயோகிக்கும் ஆயுதங்கள் அல்ல. மாறாக அரண்களை அழிக்கக்கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்திய ஆயுதங்களையே நாங்கள் உபயோகிக்கிறோம். அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப்பற்றிய அறிவை அடைவதற்குத் தடையாக நிற்கும் எல்லா மேட்டிமைகளையும் அழித்துப் போடுகிறோம். நாங்கள் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையையும் கைதியாக்கி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கிறோம். நீங்கள் எல்லோரும் முழுமையாக உங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிட்ட பின்பு, கீழ்ப்படியாத ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை கொடுக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம். நீங்கள் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். ஒருவன் தான் கிறிஸ்துவுக்குரியவன் என்று நம்பினால், தன்னைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று, அவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைக் குறித்து, நான் அளவுக்கதிகமாய் பெருமைப்பாராட்டினாலும், அந்தப் பெருமையைக் குறித்து நான் வெட்கமடைய மாட்டேன். ஏனெனில் உங்களை அழித்துப் போடுவதற்காக அல்ல, உங்களைக் கட்டியெழுப்பவே அவர் அந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். நான் என் கடிதங்களினால் உங்களைப் பயமுறுத்த முயற்சிக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், “அவனுடைய கடிதங்கள் கடுமையும், கண்டிப்பும் நிறைந்தவை. ஆனால் அவன் நேரில் எங்களுடன் பேசும்போதோ, அவன் தோற்றத்தில் கவர்ச்சியில்லாது இருப்பதோடு, அவனுடைய பேச்சும் எடுபடாது” என்று என்னைக் குறித்துச் சிலர் சொல்கிறார்கள். நாங்கள் உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடிதத்தின் மூலமாய் சொல்வதைத்தான், நாங்கள் உங்களுடன் இருக்கும்போதும் செயல்படுத்துவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கிறவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினாலேயே, தங்களை மதிப்பீடு செய்துகொள்ளும்போதும், தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்போதும், அவர்கள் கொஞ்சமும் ஞானமில்லாதவர்களாய் இருக்கிறார்களே. ஆனால் நாங்களோ, எங்களைப் பொறுத்தவரையில் எல்லைமீறிப் பெருமைபாராட்டுவதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த எல்லையைக் குறித்தே நாங்கள் பெருமை கொள்ளுவோம். அந்த எல்லை உங்களையும் உள்ளடக்குகிறது. நாங்கள் தவறாகப் பெருமைப்படவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால், இது உண்மையாய்தான் இருக்கும். ஆனால் நாங்களோ, நீங்கள் இருக்கும் இடம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியுடன் வந்தோமே. நாங்கள் மற்றவர்கள் செய்யும் வேலையை, எங்களுக்குரியதாக்கிப் பெருமை கொள்வதில்லை. அது அளவுக்கு மீறிய செயலே. ஆனால், உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து பெருகவேண்டும் என்பதும், உங்கள் மத்தியில் எங்கள் ஊழியம் வெகுவாக விரிவடைய வேண்டும் என்பதுமே எங்கள் எதிர்பார்ப்பு. அதற்குப் பின்பு, உங்களுக்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் நாங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்போம். அப்பொழுது, வேறொரு மனிதன் ஏற்கெனவே செய்த ஊழியத்தைக் குறித்து, நாங்கள் பெருமைபாராட்ட இடம் ஏற்படாது. வேதவசனம் சொல்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.” ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன்.
2 கொரிந்தியர் 10:4-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது. அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம். வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும். மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே. அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும். எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை. நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே. எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம். மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
2 கொரிந்தியர் 10:4-18 பரிசுத்த பைபிள் (TAERV)
உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம். உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல. எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.