2 இராஜா 18:1-6

2 இராஜா 18:1-6 IRVTAM

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.