2 இராஜாக்கள் 18:1-6

2 இராஜாக்கள் 18:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

2 இராஜாக்கள் 18:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது. எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

2 இராஜாக்கள் 18:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

2 இராஜாக்கள் 18:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

எசேக்கியா என்பவன் யூத ராஜா ஆகாஸின் குமாரன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் குமாரன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள். எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான். எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர். அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான்.