2 இராஜா 21:1-9

2 இராஜா 21:1-9 IRVTAM

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான். எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான். இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான். நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.