2 இராஜாக்கள் 21:1-9

2 இராஜாக்கள் 21:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின் பேர் எப்சிபாள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான். எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான். இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என்நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான். நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

2 இராஜாக்கள் 21:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மனாசே அரசனானபோது அவன் பன்னிரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய மக்களின் வெறுக்கத்தக்க பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். தனது தகப்பனாகிய எசேக்கியா அழித்த வழிபாட்டு மேடைகளை இவன் திரும்பக் கட்டினான். அத்துடன் இஸ்ரயேல் அரசனான ஆகாப் செய்ததுபோல, பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டி, அசேரா விக்கிரக தூணையும் அமைத்தான். வானத்தின் எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விழுந்து வழிபட்டான். யெகோவா எருசலேமில் என் பெயரை வைப்பேன் என்று கூறியிருந்த யெகோவாவின் ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். யெகோவாவின் ஆலயத்திலுள்ள இரண்டு முற்றங்களிலும் வானத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். தன் சொந்த மகனையே நெருப்பில் பலியிட்டு, மந்திரவித்தை, பில்லிசூனியம் ஆகியவற்றைச் செய்து, ஜோசியக்காரரிடமும், குறிசொல்கிறவர்களிடமும் ஆலோசனை பெற்றான். யெகோவாவின் பார்வையில் அதிக தீமையானவற்றைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான். மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான். இந்த ஆலயத்தைப் பற்றியே யெகோவா தாவீதுக்கும் அவன் மகன் சாலொமோனுக்கும், “இஸ்ரயேலிலுள்ள எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், அதிலுள்ள இந்த ஆலயத்திலும் என்னுடைய பெயரை என்றென்றுமாக வைப்பேன் என்று சொல்லியிருந்தார். என்னுடைய அடியவனாகிய மோசே இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அப்படி இருப்பீர்களானால் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டிலிருந்து திரும்பவும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்” என்றும் யெகோவா கூறியிருந்தார். ஆனால் மக்களோ அதைக் கவனித்துக் கேட்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்யத்தக்கதாக மனாசே அவர்களை வழிதவறி நடக்கப்பண்ணினான்.

2 இராஜாக்கள் 21:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளை வணங்கினான். எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, யெகோவவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, தன் மகனைப் பலியாக அக்கினியில் சுட்டெரித்து, நாள் நட்சத்திரம் பார்க்கிறவனுமாயிருந்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாகச் செய்தான். இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் பெயரை என்றைக்கும் விளங்கச் செய்வேன் என்று யெகோவ தாவீதோடும் அவனுடைய மகனாகிய சாலொமோனோடும் சொல்லி குறித்த ஆலயத்திலே அவன் செய்த தோப்புவிக்கிரகத்தை வைத்தான். நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாக இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தை விட்டு அலையச் செய்வதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் கேட்காமல்போனார்கள்; யெகோவ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அழித்த மக்கள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாகச் செய்ய மனாசே அவர்களைத் தூண்டிவிட்டான்.

2 இராஜாக்கள் 21:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள். கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் ராஜா ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். தன் சொந்த குமாரனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான். இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் குமாரன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு, விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.