ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 21:1-9

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 21:1-9 TAERV

மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள். கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் ராஜா ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். தன் சொந்த குமாரனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான். இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் குமாரன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு, விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.