தானி 10:7-14

தானி 10:7-14 IRVTAM

தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள். நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன். இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது. அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன். இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான்.