தானியேல் 10:7-14
தானியேல் 10:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன். உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது. பின் அவர் என்னிடம், “மிக மதிப்பிற்குரிய தானியேலே, நான் இப்பொழுது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.” இதை அவர் சொன்னபோது நான், நடுக்கத்தோடு எழுந்து நின்றேன். அப்பொழுது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்படவேண்டாம். நீ விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தேடவும், அதை அடையும்படி உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்தே, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். ஆனால் பெர்சியா அரசின் இளவரசன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எனக்கு உதவிசெய்ய வந்தான். இப்பொழுது உனது மக்களுக்கு வருங்காலத்தில் நிகழப்போவதை விளங்கப்பண்ணவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே என்றான்.”
தானியேல் 10:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள். நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன். இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது. அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன். இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான்.
தானியேல் 10:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)
தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர். எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப்போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன். பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன். பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன். தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன். பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய். ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா ராஜாவிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன். இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான்.
தானியேல் 10:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக்கொண்டார்கள், நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன். அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன். இதோ, ஒருவன் கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது. அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன். இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.