தானியேல் 10:7-14

தானியேல் 10:7-14 TCV

தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன். உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது. பின் அவர் என்னிடம், “மிக மதிப்பிற்குரிய தானியேலே, நான் இப்பொழுது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.” இதை அவர் சொன்னபோது நான், நடுக்கத்தோடு எழுந்து நின்றேன். அப்பொழுது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்படவேண்டாம். நீ விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தேடவும், அதை அடையும்படி உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்தே, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். ஆனால் பெர்சியா அரசின் இளவரசன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எனக்கு உதவிசெய்ய வந்தான். இப்பொழுது உனது மக்களுக்கு வருங்காலத்தில் நிகழப்போவதை விளங்கப்பண்ணவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே என்றான்.”