தானி 11:3-28

தானி 11:3-28 IRVTAM

ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, வல்லமையோடு ஆட்சிசெய்து, தனக்கு விருப்பமானபடி செய்வான். அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்ஜியம் உடைந்துபோய், வானத்தின் நான்கு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத மற்றவர்களிடமாகக் கொடுக்கப்படும். தெற்கு திசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைவிட பலவானாகி ஆட்சிசெய்வான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். அவர்கள் சில வருடங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்செய்யும்படிக்குத் தெற்கு திசை ராஜாவின் மகள் வடக்குதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இல்லாமற்போகும்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் இடத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடக்குதிசை ராஜாவின் பாதுகாப்பிற்குள் நுழைந்து, அவர்களை விரோதித்து, அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்திற்குக் கொண்டுபோய், சில வருடங்கள்வரை வடக்குதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாக நிற்பான். தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். ஆனாலும் அவனுடைய மகன்கள் போரிட முயற்சித்து, திரளான படைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாக வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய பாதுகாப்புவரை போரிட்டு சேருவான். அப்பொழுது தெற்கு திசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடக்குதிசை ராஜாவோடே போரிடுவான்; இவன் பெரிய படையை ஏகமாக நிறுத்துவான்; ஆனாலும் இந்தப் படை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் இந்தப் படையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான். சில வருடங்கள் சென்றபின்பு வடக்குதிசை ராஜா திரும்ப முந்தின படையிலும் பெரிதான படையைச் சேர்த்து, மகா பெரிய படையோடும் திரளான செல்வத்தோடும் நிச்சயமாக வருவான். அக்காலங்களில் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் மக்களிலுள்ள கலகக்காரர்கள் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். வடக்குதிசை ராஜா வந்து, கோட்டைமதில்களைக் கட்டி, பாதுகாப்பான நகரங்களைப் பிடிப்பான்; தெற்கு திசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட மக்களும் நிலைநிற்காமல்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இருக்காது. ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் விருப்பப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் அழகான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். தன் ராஜ்ஜியத்தின் முழுவல்லமையோடு தானும் தன்னோடேகூட படைவீரர்களும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதல் ஏற்படும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே பலப்படமாட்டான்; அவள் அவன் சார்பில் நிற்கமாட்டாள். பின்பு இவன் தன் முகத்தைத் மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான். அவன் இடத்தில், அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்ஜியபாரத்தின் மேன்மையைக் கொடுக்காதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாக நுழைந்து, ஆசைவார்த்தை பேசி, ராஜ்ஜியத்தைப் பிடித்துக்கொள்வான். வேகமாக வருகிற படைகள் இவனாலே வேகமாக முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான். ஏனென்றால் அவனோடே சம்பந்தம்செய்த நாட்கள்முதல் அவன் தந்திரமாக நடந்து, கொஞ்சம் மக்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்வான். தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கும்போது, அவன் உட்பிரவேசித்து, தன் முன்னோர்களும் தன் முன்னோர்களின் முன்னோர்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, கோட்டைகளுக்கு விரோதமாகத் தனக்குள் சூழ்ச்சிகளை யோசிப்பான்; சிலகாலம்வரை இப்படியிருக்கும். பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள். இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்திற்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த தானி 11:3-28