தானியேல் 11:3-28

தானியேல் 11:3-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான். அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம். தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து, அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய், சில வருஷங்கள்மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான். தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான். ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான். அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்; சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான். அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது. ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள். பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந்தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான். அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான். பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான். ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய்நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான். தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும். பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள். இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.

தானியேல் 11:3-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு ஒரு வல்லமையுள்ள அரசன் எழும்புவான், அவன் அதிக வல்லமையுடன் அரசாண்டு, தான் விரும்பியவற்றைச் செய்வான். ஆனால் அவனுடைய வல்லமை உயர்ந்திருந்தபோது அவனுடைய பேரரசு உடைக்கப்பட்டு, வானத்தின் நான்கு திசைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அவனுடைய அரசு பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டதால், அது அவனுடைய சந்ததிகளுக்குக் கொடுக்கப்படமாட்டாது. முன்பு அந்த அரசிற்கு இருந்த வல்லமை பின்பு அதற்கு இருக்கமாட்டாது. “பின்பு தென்திசை அரசனோ, வலிமைமிக்கவனாவான். ஆனால் அவனுடைய தளபதிகளில் ஒருவன் அவனைவிடவும் வலிமைமிக்கவனாகி, தனது சொந்த அரசை மிகுந்த வல்லமையுடன் ஆளுவான். சில வருடங்களில் தென்திசை அரசனும் வடதிசை அரசனும் நட்புறவு கொள்வார்கள். அதன்பின் தென்திசை அரசனின் மகள் வடதிசை அரசனுக்கு நட்புறவு உடன்படிக்கையை உறுதிப்படுத்த மனைவியாகக் கொடுக்கப்படுவாள். ஆனால் சதித்திட்டம் நீடிக்காது. அவனும் அவனுடைய வல்லமையும் அழிக்கப்படும். அந்நாட்களில் அவளும், அவளுடன்கூட அவளது அரச பாதுகாவலரும், அவளது தந்தையும், அவளுக்கு உதவிசெய்தவனும் அழிக்கப்படுவார்கள். “அவளுடைய குடும்ப வழியிலிருந்து வந்த ஒருவன், அவளுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும்படி எழும்புவான். அவன் வடதிசை அரசனுடைய படையைத் தாக்கி, அவனுடைய கோட்டைக்குள் புகுவான். அவன் அவர்களுக்கு எதிராய் சண்டைசெய்து வெற்றிபெறுவான். அத்துடன் அவன் அவர்களின் தெய்வங்களையும், உலோக உருவச்சிலைகளையும், அவர்களுடைய விலைமதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும், தங்கப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு எகிப்திற்குப் போவான். சில வருடங்களுக்கு வடதிசை அரசனுடன் யுத்தம் செய்யாமல் விட்டுவிடுவான். பின்பு வடதிசை அரசன், தென்திசை அரசனின் பிரதேசத்தின்மேல் படையெடுப்பான். ஆயினும் அவன் பின்பு தனது நாட்டுக்குத் திரும்புவான். வடதிசை அரசனின் மகன்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்து பெரியதொரு இராணுவப்படையைத் திரட்டுவார்கள். அந்தப் படை தடுக்க முடியாத பெருவெள்ளம்போல் அடித்துச்சென்று, மிக வேகமாகத் தென்திசை அரசனின் கோட்டைவரை சென்று சண்டையிடும். “அப்பொழுது தென்திசை அரசன் மிகுந்த கோபத்துடன், தனது படையுடன் அணிவகுத்துச்சென்று, வடதிசை அரசனுக்கெதிராகப் போரிடுவான். வடதிசை அரசன் பெரிய படையைத் திரட்டுவான். ஆயினும் அது தோல்வியே அடையும். வடதிசை அரசனின் படை, சிறைப்பிடித்துச் செல்லப்படுவதால், தென்திசை அரசன் பெருமையினால் நிறைந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொலைசெய்வான். ஆயினும் அவன் வெற்றியுடையவனாய் நிலைத்திருக்கமாட்டான். வடதிசை அரசன் முன்பு இருந்த படையைவிட பெரியதொரு படையைத் திரும்பவும் திரட்டி, சில வருடங்களுக்குப் பின்பு முற்றிலும் ஆயுதம் தரித்த ஒரு பெரிய படையுடன் முன்னேறிச் செல்வான். “அந்தக் காலங்களில் அநேகர் தென்திசை அரசனுக்கெதிராக எழும்புவார்கள். இந்தத் தரிசனம் நிறைவேறும்படியாக, உன் சொந்த மக்களுக்குள்ளேயும் வன்முறையாளர்கள் கலகம்செய்து அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். ஆயினும் அவர்கள் வெற்றியடையமாட்டார்கள். பின்பு வடதிசை அரசன் வந்து முற்றுகை அரண்களைக் கட்டி, அரணான ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவான். தென்திசை படைகள் எதிர்க்க வல்லமையற்றதாயிருக்கும். அவர்களில் மிகச்சிறந்தவர்களும் எதிர்த்துநிற்க பெலனற்றுப்போவார்கள். படையெடுத்து வரும் வடதிசை அரசன் தான் விரும்பியபடி செய்வான். அவனை எதிர்த்துநிற்க ஒருவனாலும் முடியாது. அவன் அழகான இஸ்ரயேல் நாட்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அதை அழிக்கும்படியான வல்லமையைப் பெறுவான். அவன் முழு அரசின் வல்லமையோடும் வரத்தீர்மானித்து, தென்திசை அரசுடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தைச் செய்வான். ஆனால் அவன் தென்திசை அரசைக் கைப்பற்றும்படி, தனது மகளை அவனுக்குக் கொடுப்பான். ஆனால் அவனுடைய திட்டங்கள் வெற்றியளிக்கவோ, அவனுக்கு உதவவோ மாட்டாது. பின்பு அவன் தனது கவனத்தைக் கரையோர நாடுகளின்மீது திருப்பி, அவற்றுள் பலவற்றை பிடித்துக்கொள்வான். ஆனால் ஒரு படைத்தலைவன் அவனுடைய அகங்காரத்திற்கு ஒரு முடிவு உண்டாக்கி, அவனுடைய அகங்காரத்தை அவன் மேலேயே திருப்பிவிடுவான். இவற்றின்பின் அவன் தனது சொந்த நாட்டின் கோட்டைகளின் பக்கமாய்த் திரும்பிவருவான். ஆயினும் தடுமாறி விழுந்து, காணப்படாமல் போவான். “அவனுக்குப் பின்வரும் அரசன் தனது அரசின் மேன்மையைத் தொடர்ந்து காப்பாற்றுவதற்காக, வரி வசூலிக்கும் ஒருவனை அனுப்புவான். ஆயினும் அவன் ஒருசில வருடங்களுக்குள் கோபத்தினாலோ, யுத்தத்தினாலோ அல்லாமல் அழிக்கப்படுவான். “அவனுக்குப்பின் வெறுப்புக்குரியவனும், அரச மேன்மை கொடுக்கப்படாத ஒருவனும் அரசாட்சிக்கு வருவான். அந்த அரசின் மக்கள் தாம் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவன் அதன்மீது படையெடுப்பான். அவன் தந்திரமாக அரசாட்சியைக் கைப்பற்றுவான். பின்பு திரண்டுவரும் பல படைகள் அவனால் சிதறடிக்கப்பட்டு அழிக்கப்படும். அவனை எதிர்த்த உடன்படிக்கையின் தலைவனும் அழிக்கப்படுவான். அவன் மற்ற ஜனங்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின், தந்திரமாய் நடந்து சில மக்களுடன் அதிகாரத்துக்கு வருவான். செல்வந்த மாநிலங்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது, அவன் அவற்றின்மேல் படையெடுத்து தன் தந்தையர்களும், முற்பிதாக்களும் முன் ஒருபோதும் செய்யாததை இவன் செய்வான். கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும், செல்வங்களையும் எடுத்துத் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். அவன் கோட்டைகளைக் கவிழ்க்க முயற்சிப்பான். ஆனாலும் இந்த நிலை ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். “அவன் ஒரு பெரும்படையுடன் பெலத்தாலும், மன உறுதியாலும் தூண்டப்பட்டு தென்திசை அரசனுக்கெதிராகப் போவான். தென்திசை அரசனும் பெரிதானதும், வலிமையுடையதுமான படையுடன் எதிர்த்துப் போரிடுவான். ஆனாலும் தென்திசை அரசனுக்கு எதிராய் திட்டமிடப்பட்டிருக்கும் பல சதிகளின் நிமித்தம் அவனால் எதிர்த்துநிற்க முடியாமலிருக்கும். அரசனுடைய பங்கீட்டு உதவியிலிருந்து சாப்பிட்டவர்களே அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்டு போகும். அநேகம்பேர் போர்முனையில் அழிந்துபோவார்கள். அப்பொழுது அந்த இரண்டு அரசர்களும், தங்கள் இதயங்களில் தீமைசெய்யும் எண்ணமுள்ளவர்களாய் ஒரே மேஜையில் இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பொய் பேசுவார்கள். ஆனால் அவர்களோ வெற்றியடையமாட்டார்கள். ஏனெனில் முடிவு குறிப்பிட்ட காலத்தில்தான் வரும். வடதிசை அரசன் பெரும் செல்வங்களுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வான். ஆனால் அவனுடைய இருதயம் பரிசுத்த ஆலயத்திற்கு விரோதமாய் இருக்கும். அதற்கு விரோதமான நடவடிக்கை எடுத்தபின்பே தன் நாட்டிற்குத் திரும்பிப் போவான்.

தானியேல் 11:3-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, வல்லமையோடு ஆட்சிசெய்து, தனக்கு விருப்பமானபடி செய்வான். அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்ஜியம் உடைந்துபோய், வானத்தின் நான்கு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்ஜியம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத மற்றவர்களிடமாகக் கொடுக்கப்படும். தெற்கு திசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைவிட பலவானாகி ஆட்சிசெய்வான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். அவர்கள் சில வருடங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்செய்யும்படிக்குத் தெற்கு திசை ராஜாவின் மகள் வடக்குதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இல்லாமற்போகும்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் இடத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடக்குதிசை ராஜாவின் பாதுகாப்பிற்குள் நுழைந்து, அவர்களை விரோதித்து, அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்திற்குக் கொண்டுபோய், சில வருடங்கள்வரை வடக்குதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாக நிற்பான். தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான். ஆனாலும் அவனுடைய மகன்கள் போரிட முயற்சித்து, திரளான படைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாக வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய பாதுகாப்புவரை போரிட்டு சேருவான். அப்பொழுது தெற்கு திசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடக்குதிசை ராஜாவோடே போரிடுவான்; இவன் பெரிய படையை ஏகமாக நிறுத்துவான்; ஆனாலும் இந்தப் படை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் இந்தப் படையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான். சில வருடங்கள் சென்றபின்பு வடக்குதிசை ராஜா திரும்ப முந்தின படையிலும் பெரிதான படையைச் சேர்த்து, மகா பெரிய படையோடும் திரளான செல்வத்தோடும் நிச்சயமாக வருவான். அக்காலங்களில் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் மக்களிலுள்ள கலகக்காரர்கள் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். வடக்குதிசை ராஜா வந்து, கோட்டைமதில்களைக் கட்டி, பாதுகாப்பான நகரங்களைப் பிடிப்பான்; தெற்கு திசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட மக்களும் நிலைநிற்காமல்போகும்; எதிர்க்கிறதற்குப் பெலன் இருக்காது. ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் விருப்பப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் அழகான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். தன் ராஜ்ஜியத்தின் முழுவல்லமையோடு தானும் தன்னோடேகூட படைவீரர்களும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதல் ஏற்படும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே பலப்படமாட்டான்; அவள் அவன் சார்பில் நிற்கமாட்டாள். பின்பு இவன் தன் முகத்தைத் மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான். அவன் இடத்தில், அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்ஜியபாரத்தின் மேன்மையைக் கொடுக்காதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாக நுழைந்து, ஆசைவார்த்தை பேசி, ராஜ்ஜியத்தைப் பிடித்துக்கொள்வான். வேகமாக வருகிற படைகள் இவனாலே வேகமாக முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான். ஏனென்றால் அவனோடே சம்பந்தம்செய்த நாட்கள்முதல் அவன் தந்திரமாக நடந்து, கொஞ்சம் மக்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்வான். தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கும்போது, அவன் உட்பிரவேசித்து, தன் முன்னோர்களும் தன் முன்னோர்களின் முன்னோர்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, கோட்டைகளுக்கு விரோதமாகத் தனக்குள் சூழ்ச்சிகளை யோசிப்பான்; சிலகாலம்வரை இப்படியிருக்கும். பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள். இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்திற்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.

தானியேல் 11:3-28 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட ராஜா வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான். அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். “தெற்கிலுள்ள ராஜா பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள ராஜாவைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். “பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி ராஜாவும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி ராஜாவின் குமாரத்தி, வடபகுதி ராஜாவை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி ராஜாவும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். “ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி ராஜாவின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி ராஜாவின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான். அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி ராஜாவுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். வடபகுதி ராஜா, தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான். “வடபகுதி ராஜாவின் குமாரர்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி ராஜாவின் பலமான கோட்டை வரை தாக்கும். பிறகு தென்பகுதி ராஜா மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி ராஜாவோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி ராஜாவுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான். வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி ராஜா மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான். வடபகுதி ராஜா இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும். “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி ராஜாவுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள். பிறகு வடபகுதி ராஜா வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள். “வடபகுதி ராஜா தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். வடபகுதி ராஜா தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி ராஜாவோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி ராஜா தனது குமாரத்திகளுள் ஒருத்தியைத் தென்பகுதி ராஜாவை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி ராஜா தென்பகுதி ராஜாவைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது. “பிறகு வடபகுதி ராஜா தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி ராஜா வெட்கமடையும்படிச் செய்வான். “அது நடந்தபிறகு, வடபகுதி ராஜா பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான். “அந்த வடபகுதி ராஜாவுக்குப்பிறகு ஒரு புதிய ராஜா வருவான். அந்த ராஜா ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த ராஜா தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த ராஜா அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான். “அந்த ராஜாவைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் ராஜா ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான். அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான். பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க ராஜாவோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள். “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும்போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த ராஜா போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான். “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க ராஜாவுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி ராஜாவைத் தாக்குவான். தென் பகுதி ராஜா மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி ராஜா தோற்கடிக்கப்படுவான். தென்பகுதி ராஜாவுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள். அந்த இரண்டு ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார். “வடபகுதி ராஜா பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.